வழிகாட்டு நெறிமுறைகள் மீறல்: 4 துணிக்கடைகளுக்கு ‘சீல்’ மேலும் 18 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
பெண்ணாடத்தில், வடலூர் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 4 துணிக்கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் 18 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
விருத்தாசலம்,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட கடைகள் மட்டுமே திறக்க வேண்டும் என்று அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் விதிகளை மீறி திறக்கப்படும் கடைகளை அதிகரிகள் கண்டறிந்து சீல் வைக்கும் நடவடிககையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
‘சீல்’ வைப்பு
அந்த வகையில், பெண்ணாடம் பேரூராட்சியில் உள்ள தேரடி வீதியில் இயங்கி வந்த 2 துணிக்கடைகளை நேற்று திறந்து வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதுபற்றி அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, அனுமதியின்றி திறந்திருந்த 2 துணிக்கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
அபராதம்
பின்னர் கடைவீதி பகுதியில் உத்தரவை மீறி திறந்திருந்த நகை அடகு கடை, கவரிங் கடை உள்பட 18 கடைகளின் உரிமையாளர்களிடம் தலா 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர். இதனால் பெண்ணாடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இளநிலை உதவியாளர் ராஜசேகர், ரமேஷ், தொழில்நுட்ப உதவியாளர் முத்துக்குமரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
வடலூர்
இதேபோல் வடலூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று குறிஞ்சிப்பாடி தாசில்தார் சையத் அபுதாகிர் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கெண்டனர்.
அப்போது, வடலூரில் உள்ள 2 துணிக்கடைகள் திறக்கப்பட்டு, பின்பக்க வாசல் வழியாக வியாபாரம் நடந்து வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த கடைக்குள் அதிகாரிகள் சென்று பார்த்த போது, கடையில் அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் இருந்தது.
உடன் அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றிய அதிகாரிகள், 2 துணிக்கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர். மேலும் கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த பல கடைகளின் உரிமையாளர்களை அவர்கள் எச்சரிக்கை செய்து, மூடுவதற்கு அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story