அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை: கடலூரில், தனியார் மருத்துவமனை மூடல்


அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை: கடலூரில், தனியார் மருத்துவமனை மூடல்
x
தினத்தந்தி 9 Jun 2021 10:46 PM IST (Updated: 9 Jun 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையை அதிகாரிகள் பூட்டு போட்டு மூடினர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 இது தவிர அனுமதி பெற்ற 9 தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதன்படி கடலூர் வண்டிப்பாளையம் சாலை பகுதியில் உள்ள (வி.சி.எஸ்) தனியார் மருத்துவமனையிலும் அனுமதி பெற்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


பூட்டு போட்டனர்

 இந்நிலையில் நேற்று இந்த மருத்துவமனைக்கு மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, தாசில்தார் பலராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் மருத்துவ குழுவினர் வந்தனர். 


பின்னர் அவர்கள் அந்த மருத்துவமனை டாக்டரிடம், உங்கள் மருத்துவமனையில் கொரோனா தொடர்பாக அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காததால் தற்காலிகமாக மூடுகிறோம் என்றனர். தொடர்ந்து அந்த மருத்துவமனையை மூடி தாசில்தார் பலராமன் பூட்டு போட்டு பூட்டினார்.

விதிமுறைகள் மீறல்

இதுபற்றி நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு கூறுகையில், இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், நோய்த்தொற்று பரவலை உண்டாக்கும் வகையில் மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டு உள்ளது.

அதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் இந்த மருத்துவமனையை தற்காலிகமாக மூடி உள்ளோம் என்றார்.


Next Story