மாவட்ட செய்திகள்

இருமாவட்ட எல்லையில் தாசில்தார்கள் ஆய்வு + "||" + theft

இருமாவட்ட எல்லையில் தாசில்தார்கள் ஆய்வு

இருமாவட்ட எல்லையில் தாசில்தார்கள் ஆய்வு
அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு நடப்பதாக வந்த புகார் எதிரொலியாக இருமாவட்ட எல்லையில் தாசில்தார்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மடத்துக்குளம்
அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு நடப்பதாக வந்த புகார் எதிரொலியாக இருமாவட்ட எல்லையில் தாசில்தார்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தண்ணீர் திருட்டு
மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியும், திண்டுக்கல் மாவட்ட எல்லைப்பகுதியும் இணைந்துள்ளது. குறிப்பாக திருப்பூர் மாவட்ட எல்லைக்கு அருகே அமராவதி ஆறு அமைந்துள்ளது. இந்த அமராவதி ஆறு மற்றும் அமராவதி பழைய ராஜ வாய்க்கால் ஆகிய பாசன நீரை பயன்படுத்தி, அமராவதி ஆற்றங்கரையோரம் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அமராவதி ஆற்று நீரை, திண்டுக்கல் மாவட்ட எல்லைப்பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக தெரிகிறது. இதற்காக அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து, திண்டுக்கல் மாவட்ட எல்லை பகுதி வரை, 5 கிலோமீட்டர் தூரத்திற்கு, மோட்டார் வைத்து, தண்ணீர் கொண்டு செல்ல பெரிய அளவிலான பிளாஸ்டிக் குழாய்களை மண்ணுக்கு அடியில் பதித்து தண்ணீரை கடத்தி திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதிக்கு கொண்டு சென்றதாகவும். பின்னர் அங்குள்ள கிணறுகளில் தேக்கி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள கடத்தூரை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், கடந்த சில மாதங்களாக இரு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தனர்.
தாசில்தார்கள் ஆய்வு
இந்நிலையில் இரு மாவட்ட எல்லைப்பகுதிக்கு நேற்றுகாலை முதல் மாலை வரை, இரு மாவட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மடத்துக்குளம் தாசில்தார் கனிமொழி, துங்காவி வருவாய் ஆய்வாளர் ரமேஷ்குமார், கடத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழன், மடத்துக்குளம் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த உதவி பொறியாளர் ஞானவேல், குமரலிங்கம் பொதுப்பணித் துறையை சார்ந்த உதவி பொறியாளர் குமரவேல், மடத்துக்குளம் வருவாய் துறையினரும், அதேபோல் திண்டுக்கல் மாவட்ட பகுதிக்கு உட்பட்ட பழனி தாசில்தார் வடிவேல் முருகன், மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதிக்குட்பட்ட வருவாய் ஆய்வாளர், உதவி பொறியாளர், தொப்பம்பட்டி மற்றும் முத்துநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர்கள் சம்பந்தப்பட்ட அமராவதி ஆற்றுப்படுகை மற்றும் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீரை திருடிக் கொண்டு செல்லும் பாதை, அமராவதி கரையோரம் உள்ள கிணறுகள், ஆகியவற்றை பார்வையிட்டனர்.
அறிக்கை
பின்னர் மாவட்ட எல்லை ஆய்வு குறித்து, இரு மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தற்போது நடைபெற்ற கள ஆய்வுகள் குறித்த, அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, இரு மாவட்ட நிர்வாகத்திடமும் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.