உடுமலை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரம்


உடுமலை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 9 Jun 2021 5:44 PM GMT (Updated: 9 Jun 2021 5:44 PM GMT)

பி.ஏ.பி.பாசன திட்டத்தில் உடுமலை அருகே, உடுமலை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உடுமலை
பி.ஏ.பி.பாசன திட்டத்தில் உடுமலை அருகே, உடுமலை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பி.ஏ.பி.உடுமலை கால்வாய்
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தில் (பி.ஏ.பி) உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலம்பாசன வசதி பெறுகிறது. இதில் திருமூர்த்தி அணை அருகில் பிரதான கால்வாய் பகுதியில் இருந்து தொடங்கும் உடுமலை கால்வாய் 38.12 கி.மீ. தூரம் உள்ளது. இந்த கால்வாய் மூலம் 58 ஆயிரத்து 282 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
கான்கிரீட் கால்வாயான இந்த கால்வாயில் பல இடங்களில் கான்கிரீட் தளங்கள் மற்றும் பக்கவாட்டில் பதிக்கப்பட்டுள்ள சிலாப்புகள் சிதிலமடைந்துள்ளன.அதனால் திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுஉடுமலைகால்வாயில் சென்று கொண்டிருக்கும்போது, சிதிலமடைந்த பகுதிகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு விரயமாகிறது. அதனால் சிதிலமடைந்துள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு கால்வாயை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
சீரமைப்பு பணிகள்
இதைத்தொடர்ந்து அதிக அளவில் சிதிலமடைந்து காணப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி உடுமலை-பழனி சாலையில் இருந்து தாராபுரம் சாலையில் தாந்தோணி அருகே உள்ள பகுதி வரை 6.57 கி.மீ. தூரத்திற்கு (நீளம்) சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.2 கோடியே 95 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் கடந்த ஆண்டு (2020) ஜூலை மாதம் 31-ந்தேதி தொடங்கப்பட்டது.
 இந்த பி.ஏ.பி.உடுமலை கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் தண்ணீர் நிறுத்தப்படும் நாட்களில் சீரமைப்புபணிகள் நடந்து வந்தன. இதில் சிதிலமடைந்த தளம் பகுதிகளில்சீரமைப்பு பணிகள் நடந்தன. கால்வாயின் பக்கவாட்டில் பதிக்கப்பட்டிருந்த சிலாப்புகளில் சிதிலமடைந்தவற்றிற்கு பதிலாக புதிய சிலாப்புகள் பதிக்கப்பட்டன. 
இறுதிக்கட்ட பணிகள்
கரைப்பகுதியில் சிதிலமடைந்த பகுதிகள் சிமெண்ட் கலவை பூசப்பட்டு சீரமைக்கப்பட்டன. அதன்படி இதுவரை 6.2 கி.மீ. தூரத்திற்கு பணிகள் நடந்து முடிந்துள்ளன. 
இந்த நிலையில் 3-ம் மண்டல பாசனத்திற்கு திறந்து விடப்பட்டிருந்த தண்ணீர் கடந்த மாதம்  25-ந்தேதி நிறுத்தப்பட்டதைத்தொடர்ந்து, இந்த நிதி ஒதுக்கீட்டில் சித்தகுட்டை அருகே மீதி உள்ள 370 மீட்டர் நீளத்திற்கு செய்ய வேண்டிய இறுதிக்கட்டபணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 
இந்த பணிகள் பி.ஏ.பி.பாசன திட்ட உடுமலை கால்வாய் உதவிப்பொறியாளர் என்.ஜெயக்குமார், பாசன உதவியாளர் (லஸ்கர்) நவநீதன் ஆகியோர் மேற்பார்வையில் நடந்து வருகிறது.
ஷட்டர்கள்
இந்த பணிகளில் பாசன பகுதிகளுக்கு கிளை கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடப்படும் ஷட்டர்களில் 9 ஷட்டர்களை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு இதுவரை 6 ஷட்டர்கள் மாற்றப்பட்டுள்ளது. 
இனி 3 ஷட்டர்கள் மாற்றப்படவேண்டியுள்ளது.உடுமலை கால்வாயில் இந்த சீரமைப்பு பணிகள் முழுவதையும் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Next Story