ஆன்லைன் வர்த்தகம் மூலமாக பணம் மோசடி
ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் இணையதளம் மூலமாக ஆயிரக்கணக்கானோரை இணைத்து பணம் பறித்து வரும் மர்ம கும்பல் மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி பல லட்ச ரூபாயை சுருட்டியது அம்பலமாகி உள்ளது.
அனுப்பர்பாளையம்
ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் இணையதளம் மூலமாக ஆயிரக்கணக்கானோரை இணைத்து பணம் பறித்து வரும் மர்ம கும்பல் மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி பல லட்ச ரூபாயை சுருட்டியது அம்பலமாகி உள்ளது.
ஆன்லைன் மோசடி
சமீப காலமாக ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் ஏமாற்றுபவர்களும், ஏமாற்றப்படுபவர்களும் அதிகரித்து வருகின்றனர். வீட்டில் இருந்தே கைநிறைய சம்பாதிக்கலாம். சிறிய முதலீட்டில் மிகப்பெரிய வருமானம். குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகலாம். இதுபோன்ற ஆசை வார்த்தைகளை நம்பி பணத்தை முதலீடு செய்து பல ஆயிரம் முதல் பல கோடி ரூபாய் வரை இழந்தவர்களும் உண்டு.
பொதுமக்களின் செல்போன் எண்களை எப்படியோ தேடி கண்டுபிடித்து குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி மூலமாக வலையை விரித்து, தப்பி தவறி ஏமாந்து தங்களது ஆசை வலையில் விழுபவர்களிடம் இருந்து கிடைத்த தொகையை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பண ஆசையில் தங்களிடம் சிக்கிக்கொண்டவர்களை நம்ப வைப்பதற்காக தாங்கள் கூறிய வாக்குறுதிகளை உண்மையாக நிறைவேற்றுவது போன்று லாப தொகையை வழங்கி சிறிது காலத்திற்கு நடித்து, மிகப்பெரிய தொகை வரும்போது அப்படியே மொத்தமாக சுருட்டிக்கொண்டு செல்வது ஆன்லைன் வர்த்தக மோசடி கும்பலின் வாடிக்கையான செயலாக உள்ளது.
பணத்தை இழந்தனர்
இந்த நிலையில் கடந்த 2 மாதமாக கொரோனா ஊரடங்கை மையமாக வைத்து ஆன்லைன் பிசினஸ் மூலமாக பல்லாயிரக்கணக்கானோரை இணைத்து, அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளது ஒரு கும்பல். இந்த கும்பலிடம் திருப்பூர் வஞ்சிபாளையம், அனுப்பர்பாளையம், புதிய பஸ் நிலையம், அவினாசி, வீரபாண்டி உள்பட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:-
குறுஞ்செய்தி
கடந்த 2 மாதங்களாக எலக்ட்ரிக் கிரியேஷன் என்ற பெயரில் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான குறுஞ்செய்தி வலம் வந்தது. இது சம்பந்தப்பட்ட இணையதளத்திற்குள் சென்று முதலில் பார்க்க வைக்கிறது. பின்னர் அதில் உள்ள வழிமுறைகள் மூலமாக உறுப்பினராக பதிவு செய்யப்படுகிறது. மேலும் அதில் எந்த திட்டத்தில் சேர்ந்தால் எவ்வளவு பணம் கட்ட வேண்டும். அந்த தொகை கட்டினால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது தொடர்பான விவரங்களும் அந்த இணையதளத்தில் காட்டப்படுகிறது.
மேலும் இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் தங்களை இணைத்துக்கொள்பவர்கள் முன்பணமாக செலுத்துவதற்காக கூகுள் பே, போன் பே உள்பட பல்வேறு வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பணம் செலுத்திய பின்னர் ஒரு வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட்டு, அதில் உறுப்பினர்களாக 200-க்கும் மேற்பட்டோர் இணைக்கப்படுகின்றனர். இதில் குழு நிர்வாகியாக ஒரு பெண் இருந்து வந்தார். அந்த வாட்ஸ்-அப் குழுவில் உறுப்பினர்கள் செலுத்தும் தொகையும், தினமும் அவர்களுக்கு வழங்கப்படும் லாப தொகை தொடர்பான விவரங்களும் பதிவிடப்பட்டு வந்தது.
3 மடங்கு லாபம்
அதன் அடிப்படையில் ரூ.379 செலுத்தினால் தினமும் 16 ரூபாய் என்ற முறையில் 60 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகையில் இருந்து 2 அல்லது 3 மடங்கு லாபம் பெறும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் ரூ.3,799, ரூ.17,999, ரூ.37,999, ரூ.77,999 என வெவ்வேறு திட்டங்கள் மூலமாக இந்த தொகைகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து முன்பணமாக பெறப்பட்டு, அவர்களுக்கு லாபமும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திடீரென வாட்ஸ்-அப் குழு முடக்கப்பட்டு, அந்த குழுவின் நிர்வாகியும் அதில் இருந்து வெளியேறினார். மேலும் இந்த குழுவில் இருந்தவர்களுக்கு தினமும் வந்து கொண்டிருந்த லாப தொகையும் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இணையதளம் மற்றும் வாட்ஸ்-அப் குழுவின் நிர்வாகியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு, இணையதளமும் முடக்கப்பட்டிருந்தது.
பல லட்சம் மோசடி
இந்த வாட்ஸ்-அப் குழு மூலமாக 200-க்கும் மேற்பட்டோர் பல லட்சம் மூதலீடு செய்து ஏமாந்தது தெரிய வந்துள்ளது. இதேபோல் பல்வேறு பெயர்களில் பல குழுக்களை உருவாக்கி பல லட்சம் ரூபாயை அந்த கும்பல் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து பலர் போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் படித்த இளைஞர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களும், தொழிலதிபர்களுமாக உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஊரடங்கை பயன்படுத்தி கடந்த 2 மாதமாக இந்த கும்பல் பல லட்சங்களை ஆன்லைன் மூலமாக சுருட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் மற்றும் ஆன்லைன் வர்த்தக மோசடி தொடர்பாக போலீசார் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் ஏராளமானோர் தாங்களாகவே போய் ஏமாற்று கும்பலிடம் சிக்கிக்கொள்கின்றனர். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை நிரூபித்துள்ளது இது போன்ற மோசடி சம்பவம்.
Related Tags :
Next Story