5,100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலை, வீரபாண்டி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் மற்றும் வனத்துறையினர் கைப்பற்றி அழித்தனர்.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் கல்வராயன்மலையில் உள்ள தாழ்பாச்சேரி பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடை அருகே 600 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த பழனி மகன் வேல்முருகன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சேராப்பட்டு வனச்சரகத்திற்குட்பட்ட குறும்பாலூர் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் வனச்சரகர் வெங்கடேசன், வனவர்கள் இமயராஜ், அசோக், வனக்காப்பாளர்கள் வேலு, ஜெய்சங்கர், சவுமியா, சம்பத் ஆகியோர் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு சிலர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். வனத்துறையினரை பார்த்ததும் சாராய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து அங்கு 6 பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை வனத்துறையினர் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சிய கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி அருகே உள்ள நாவன்தாங்கல் கிராமத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக சரத்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வீரபாண்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சிய முருகன் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 300 லிட்டர் சாராய ஊறலையும் கைப்பற்றி அழித்தனர்.
அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஒட்டம்பட்டு மற்றும் வசந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story