தின்னர் பேரல்களை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தின்னர் பேரல்களை ஏற்றி வந்த ஒரு கன்டெய்னர் லாரி ஜோலார்பேட்டை அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
ஜோலார்பேட்டை
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தின்னர் பேரல்களை ஏற்றி வந்த ஒரு கன்டெய்னர் லாரி ஜோலார்பேட்டை அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
முந்திச்செல்ல முயற்சி
சென்னை பாரிமுனை லிங்கரெட்டி தெருவில் வசித்து வருபவர் துரை. இவரின் மகன் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான கன்டெய்னர் லாரி உள்ளது. அந்தக் கன்டெய்னர் லாரியை வேலூரை அடுத்த பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த டிரைவர் சத்யராஜ் (வயது 32) என்பவர் ஓட்டி வருகிறார்.
அவர், நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து 140 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரல்களில் 7 டன் எடையிலான தின்னரை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
நேற்று மதியம் 1 மணியளவில் ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை அருகில் வரும்போது, அந்த வழியாக வந்த மற்றொரு லாரியை முந்திச்செல்ல முயன்று சாலையோரம் ஒதுக்கி ஓட்டினார்.
டிரைவர் காயம்
அந்த நேரத்தில் கன்டெய்னர் லாரி நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் கன்டெய்னர் லாரி டிரைவர் சத்தியராஜ் காயத்துடன் உயிர் தப்பினார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கன்டெய்னர் லாரியில் ஏற்றி வரப்பட்ட 7 டன் தின்னர் பேரலை மற்றொரு கன்டெய்னர் லாரிக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தனர். அப்போது தீ விபத்து ஏற்படாமல் இருக்க நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
மற்றொரு கன்டெய்னரில் ஏற்றப்பட்டது
தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் எஸ்.பழனி தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று வந்து பள்ளத்தில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி மீது 3 மணி நேரம் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சியடித்து குளிரூட்டினர்.
பின்னர் கன்டெய்னர் லாரியில் இருந்த 7 டன் தின்னர் பேரலை கிரேன் மூலமாக மற்றொரு கன்டெய்னர் லாரியில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story