‘கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மனைவியை தீர்த்துக் கட்டினேன்’- ராசிபுரம் வேன் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்


‘கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மனைவியை தீர்த்துக் கட்டினேன்’- ராசிபுரம் வேன் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 9 Jun 2021 11:51 PM IST (Updated: 9 Jun 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றதாக ராசிபுரம் வேன் டிரைவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராசிபுரம்
கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றதாக ராசிபுரம் வேன் டிரைவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மனைவி படுகொலை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பிற்படுத்தப்பட்டோர் காலனியில் வசித்து வந்தவர் செந்தில் (வயது 41). இவர் சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 7-ந் தேதி (திங்கட்கிழமை) நள்ளிரவு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி சங்கீதாவின் (36) தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தார். 
இதுதொடர்பாக ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது முதலில் செந்திலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால், சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் அதுதொடர்பான தகராறில் செந்திலின் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
துருவி துருவி விசாரணை
ஆனால் செந்திலுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால்தான் எனது தங்கை கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் செந்திலின் மைத்துனர் செந்தில்குமார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவை அடிப்படையாக கொண்டு செந்திலிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த செந்தில், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவியை கொன்றதற்கான காரணத்தை போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலமாக அளித்தார்.
வாக்குமூலம்
அதாவது, போலீசாரிடம் செந்தில் அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-
எனக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லை. அவ்வப்போது சங்கீதாவிடம் பணம் கேட்பேன். அவள் பணம் தர மாட்டாள்..
எனக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பும் இருந்தது. அதனால்தான் நான் அடிக்கடி பணம் கேட்பதாக கூறி என்னுடைய மனைவி தகராறு செய்து வந்தாள். தகராறு ஏற்படும் போதெல்லாம் என்னை கடுமையாக திட்டுவாள்.
தீர்த்துக்கட்ட முடிவு
கடந்த 15 நாட்களாக எங்களது சொந்த ஊரான வடுகத்தில் வசித்து வந்தோம். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதற்காக சிகிச்சை பெற ராசிபுரத்துக்கு கடந்த 6-ந் தேதி வந்தேன். அப்போது என்னுடன் மனைவி, மூத்த மகன் ராமகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து வந்தேன். அன்று இரவு ராசிபுரத்தில் எங்களது வீட்டில் தங்கினோம். 
மறுநாள் 7-ந் தேதி பகலில் எனக்கும், சங்கீதாவுக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நான், அடிக்கடி சண்டை போடுகிறாள், கள்ளக்காதலுக்கும் இடையூறாக இருக்கிறாள். இவளை இப்படியே விட்டால் சரி வராது. தீர்த்துக்கட்டி விட வேண்டியது தான் என முடிவு செய்தேன். அன்று இரவு மனைவி, மூத்த மகன் இருவரையும் அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு தூங்க சென்றேன்.
கல்லால் தாக்கி கொன்றேன்
நான் நள்ளிரவு விழித்து பார்த்தேன், சங்கீதா நன்கு தூங்கி கொண்டு இருந்தாள். அப்போது அவள் பகலில் என்னிடம் தகராறு செய்தது நினைவுக்கு வந்தது. ஆத்திரம் தீராத நான் அவளை எப்படி தீர்த்துக் கட்டுவது என நினைத்தேன். அப்போது வீட்டு மொட்டை மாடியில் துணி காய வைப்பதற்காக நடப்பட்டு இருந்த கம்பிக்கு பக்கபலமாக ஒரு கல் இருந்ததை கண்டேன்.
அந்த கல்லை தூக்கி கண் இமைக்கும் நேரத்தில் சங்கீதாவின் தலையில் போட்டேன். அவளது அலறல் சத்தம் கேட்டு என்னுடைய மகன் ராமகிருஷ்ணன் விழித்து விட்டான். என்ன நடந்தது என்று அவன் சுதாரிப்பதற்குள், ஆத்திரம் தீராத நான் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை தூக்கி சங்கீதாவை அடித்தேன். அவள் ரத்த வெள்ளத்தில் பலியானாள்.
மகனால் சிக்கினேன்
உடனே நான் அங்கிருந்து தப்ப முயன்றேன். என்னுடைய மகன் என்னை கட்டி பிடித்துக் கொண்டு சத்தம் போட்டு அலறினான். பக்கத்து வீட்டுக்காரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் என்னை பிடித்துக் கொண்டனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து என்னை பிடித்து வந்தனர். என்னுடைய மகனின் செயலால் நான் போலீசில் சிக்கிக் கொண்டேன். போலீசார் என்னிடம் விசாரணை நடத்தியதில் மனைவியை கொன்றதை ஒப்புக்கொன்டேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் செந்தில் கூறியுள்ளதாக போலீசார் கூறினர்.
கைதான செந்தில், ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story