கொரோனா பாதித்த கர்ப்பிணி தப்பி ஓடியதால் பரபரப்பு


கொரோனா பாதித்த கர்ப்பிணி தப்பி ஓடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 6:25 PM GMT (Updated: 9 Jun 2021 6:25 PM GMT)

கொரோனா பாதித்த கர்ப்பிணி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு தப்பி ஓடி விட்டார். 5 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தென்தாமரைகுளம்:
கொரோனா பாதித்த கர்ப்பிணி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு தப்பி ஓடி விட்டார். 5 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கர்ப்பிணிக்கு கொரோனா
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய டிரைவருக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். டிரைவரின் மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
இந்தநிலையில் டிரைவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து டிரைவர் வீட்டிலிருந்து மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இவர் மூலமாக அவருடைய மனைவிக்கும் தொற்று பரவியது. இதனால் டிரைவர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகிய 3 பேரும் கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றனர்.
தப்பி ஓட்டம்
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமாக இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே டிரைவருக்கு கொரோனோ சிகிச்சை முடிந்தது. அந்த சமயத்தில் செவிலியர்களும், டாக்டர்களும் தனக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என டிரைவர் மனைவி, டிரைவரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர்கள் வார்டில் சிகிச்சை அளித்தவர்களிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் யாருக்கும் தெரியாமல் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி வீட்டுக்கு சென்று விட்டனர்.
அதிகாரிகள் பேச்சு
டிரைவர் குடும்பத்தோடு ஊருக்கு சென்ற விஷயம் ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கர்ப்பிணிப் பெண்ணை மீண்டும் சிகிச்சைக்கு அழைத்து வர உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று தென்தாமரைகுளம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜன், தென் தாமரைகுளம் கிராம நிர்வாக அதிகாரி ஜெயகவிதா, அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சக்தி, சுகாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் செவிலியர்கள் ஒரு ஆம்புலன்ஸ் மூலம் சம்பந்தப்பட்ட கர்ப்பிணி வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
அப்போது, சிகிச்சை முடியாமல் ஆஸ்பத்திரியில் இருந்து வரக்கூடாது, அதனால் பிறருக்கு பெரிய பாதிப்பு ஏற்படும், உங்களுடைய உடல்நிலைக்கும் ஆபத்து என்றும் அறிவுரை கூறினர். அதற்கு அந்த பெண் மசியவில்லை. நாங்கள் தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தோம். அதில் எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று டாக்டர்கள் கூறியதாக தெரிவித்தார். ஒரு கட்டத்தில் அதிகாரிகள், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போனார்கள்.
சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மீண்டும் ஆஸ்பத்திரிக்கு செல்ல சம்மதம் தெரிவித்தார். அதன்பிறகு தான் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். பிறகு அவர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் தென்தாமரைகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story