விவசாயிகளின் தரிசு நிலங்களை சீரமைக்க புதிய திட்டம்-கலெக்டர் தகவல்


விவசாயிகளின் தரிசு நிலங்களை சீரமைக்க புதிய திட்டம்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2021 6:28 PM GMT (Updated: 9 Jun 2021 6:28 PM GMT)

விவசாயிகளின் தரிசு நிலங்களை சீரமைக்க புதிய திட்டம் இருப்பதாக ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை,

விவசாயிகளின் தரிசு நிலங்களை சீரமைக்க புதிய திட்டம் இருப்பதாக ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

ஆய்வு கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இயல்பான அளவை விட கூடுதலாக மழை பெய்தது. இதனால் நெல், சிறுதானியங்கள், சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், குதிரைவாலி, உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, பருத்தி, நிலக்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் நல்ல மகசூலை பெற்றனர்.
அதேபோல் இந்த ஆண்டும் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது. எனவே கடந்த ஆண்டை விட கூடுதலாக விவசாயிகள் பயிர் வகைகளை பயிரிட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் விவசாயிகளிடம் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய விவசாயம் மற்றும் அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து அவ்வப்போது அறிவுரைகளை வழங்க வேண்டும்.

தரிசு நிலங்களை சீரமைக்க...

மேலும், விளைநிலங்கள் பகுதிகள் போக பயன்படுத்தபடாத விவசாயிகளின் தரிசு நிலங்களை சீரமைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் தரிசு நிலங்களை சீரமைக்க வேண்டும். விவசாயிகள் விவசாயப்பணி மேற்கொள்வதற்கு முன்னதாக விளைநிலங்களில் மண் மாதிரிபரிசோதனை செய்து மண் தன்மைக்கேற்ப தகுந்த பயிர்வகைகள் பயிரிட வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
குறிப்பாக, தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாயப்பணிகளை மேற்கொள்ளும் போது விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். அதேநேரம் பயன்படுத்தாமல் இருந்த இடத்தை அரசு வழிகாட்டுதலுடன் சீரமைத்து கொடுப்பதால் விவசாயிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளும் பயன்படுத்தாத தரிசு நிலங்களை சீரமைக்க முன்வருவார்கள்.

அரசு திட்டங்கள்

நிலம் சீரமைக்கப்பட்ட பிறகு வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம்  என்னென்னப் பயிர்கள் பயிரிட்டால் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதை விவசாயிகள் அறிந்து செயல்பட வேண்டும். இதற்காக வேளாண் அலுவலர்களை அணுகி அரசு திட்டங்களை பின்பற்றி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வெங்கடேசன். துணை இயக்குனர் கதிரேசன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் சக்திவேல், தர்மர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story