30 சதவீத தனியார் மருத்துவமனை படுக்கைகளை திரும்ப ஒப்படைக்க முடிவு


30 சதவீத தனியார் மருத்துவமனை படுக்கைகளை திரும்ப ஒப்படைக்க முடிவு
x
தினத்தந்தி 10 Jun 2021 12:52 AM IST (Updated: 10 Jun 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் தனியார் மருத்துவமனையின் 30 சதவீத படுக்கைகளை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு:

பெங்களூருவில் கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் தனியார் மருத்துவமனையின் 30 சதவீத படுக்கைகளை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

தனியார் மருத்துவமனைகள்

பெங்களூருவில் மருத்துவ படுக்கைகள் நிர்வாகம் குறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தலைமையில் ஒரு குழு செயல்பட்டு வருகிறது. பெங்களூருவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் தனியார் மருத்துவமனையில் அரசுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகளை அந்த மருத்துவமனைகளுக்கு திரும்ப ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

 இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 50 சதவீத படுக்கைகள் அதாவது 11,574 படுக்கைகைள அரசுக்கு ஒப்படைத்தது. நகரில் தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. 


அதாவது கடந்த 15 நாட்களாக மருத்துவமனைகளுக்கு வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக 200 பேர் மட்டுமே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள்.

திரும்ப ஒப்படைக்க முடிவு

தினசரி பாதிப்பில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவ படுக்கை தேவைப்படுகிறது. தற்போது தனியார் மருத்துவமனைகளில் அரசு ஒதுக்கீட்டின் படுக்கைகளில் 539 கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சுமார் 6 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக 5,280 பொது படுக்கைகளை அந்த தனியார் மருத்துவமனைகளுக்கு திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். 

இது போக 1,320 படுக்கைகள் அரசு வசமே உள்ளன. அதாவது தனியார் மருத்துவமனைகள் 50 சதவீத படுக்கைகளை அரசுக்கு வழங்கின. அதில் 30 சதவீதத்தை திரும்ப கொடுத்துவிட்டு 20 சதவீத படுக்கைகளை மட்டுமே அரசு தன்வசம் வைத்துக் கொண்டுள்ளன.

 ஐ.சி.யு. படுக்கைகளை அப்படியே வைத்துள்ளோம். வென்டிலேட்டர் படுக்கைகள் 75 காலியாக உள்ளன. அதையும் அரசே வைத்துக் கொண்டுள்ளது.

கொரோனா 3-வது அலை

தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3,300 படுக்கைகளை அரசு தனது வசம் வைத்துக் கொண்டுள்ளது. மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால், அந்த 30 சதவீத படுக்கைகளை அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளோம்.

அதே நேரத்தில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட அரசு ஆஸ்பத்திரிகள், சிகிச்சை மையங்கள் ஆகியவற்றை அப்படியே வைத்துக் கொண்டுள்ளோம். பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அரசு படுக்கைகளை விடுவிப்பது குறித்து முடிவு எடுப்பார்கள். 

இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தைகளுக்கு சிகிச்சை

குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்கள். அதை சரிசெய்ய, மற்ற பிரிவு டாக்டர்களுக்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 2 நாட்கள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் இந்த பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சிகளை அனைத்து டாக்டர்களுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்த பணிகளை இப்போது இருந்தே தொடங்க முடிவு செய்துள்ளோம். வருகிற 14-ந் தேதி காலையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடைகின்றன.


இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் திறப்பு நேரத்தை அனுமதிப்பது, பூங்காக்களை திறப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். இதுகுறித்த அறிவிப்பை முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story