மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை + "||" + Couple commits suicide due to debt harassment

கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை
மங்களூரு அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
மங்களூரு:

மங்களூரு அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

தம்பதி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கத்ரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பின்டோஸ் லேன் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ்(வயது 52). இவரது மனைவி வாணி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. 

சுரேஷ் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வாணி மங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக ஊழியராக பணியாற்றி வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக இவர்கள் 2 பேரும் தங்களது வேலையை இழந்துவிட்டதாக தெரிகிறது. 

இதனால் குடும்பம் நடத்த கஷ்டப்பட்ட அவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளனர். ஆனால் அவர்களால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பிக்கேட்டு அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். 

தற்கொலை

இதனால் மனமுடைந்த சுரேசும், அவரது மனைவி வாணியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

 மேலும் அவரது மனைவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் வாணி தூக்கில் பிணமாக தொங்குவதையும், சுரேஷ் கிணற்றில் பிணமாக மிதப்பதையும் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் அவர்கள் இதுபற்றி கத்ரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.