காரையாறு வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை; வனத்துறையினர் ஆய்வு


காரையாறு வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை; வனத்துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Jun 2021 7:35 PM GMT (Updated: 9 Jun 2021 7:35 PM GMT)

காரையாறு வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது. இதுதொடர்பாக அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம், ஜூன்:
காரையாறு வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது. இதை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

இறந்து கிடந்த யானை

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியான பாபநாசம் காரையாறுக்கு மேலே அடர்ந்த வனப்பகுதிக்குள் இஞ்சிக்குழி என்னும் இடம் உள்ளது. 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மிளா, செந்நாய், மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. 
இந்த நிலையில் முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

புதைப்பு

அதன்பேரில், புலிகள் காப்பக அம்பை துணை இயக்குனர் கவுதம் தலைமையில், நெல்லை கால்நடை மருத்துவர்கள் மனோகரன், சிவமுத்து, முண்டந்துறை வனச்சரகர் சரவணகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.

யானையின் உடல் அழுகிய நிலையில் சிதைந்து காணப்பட்டது. இதனால் அந்த யானை இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகி இருக்கும் என்று தெரியவந்தது. பின்னர் யானை அந்த பகுதியில் புதைக்கப்பட்டது.

வனத்துறையினர் விளக்கம்

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “வனப்பகுதியில் இறந்து கிடந்தது 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஆகும். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து இந்த யானை இறந்து இருக்கலாம் என்று கருதுகிறோம். இதனால் அதன் உடல் சிதைந்து காணப்பட்டு உள்ளது.
மேலும் யானையின் எலும்புகள் மற்றும் கோரைபற்கள் ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர். 
இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story