பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடக்கிறது


பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடக்கிறது
x
தினத்தந்தி 10 Jun 2021 1:10 AM IST (Updated: 10 Jun 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மந்திரியின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பான வழக்கில் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் மந்திரியின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பான வழக்கில் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.

இளம்பெண் குற்றச்சாட்டு

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ விவகாரம் குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இந்த வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு வழக்கு பதிவாகி இருந்தாலும், அவர் கைது செய்யப்படவில்லை. அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளியிடம் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டிய நரேஷ்கவுடா, ஸ்ரவன் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.


இதற்கிடையில், ஆபாச வீடியோ விவகாரம் குறித்து விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழு போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றும், அவர்கள் பாரபட்சமாக விசாரணை நடத்துவதாகவும், எனவே வேறு ஒரு அமைப்பு விசாரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை கூறி கர்நாடக ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்ட இளம்பெண் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இதுகுறித்து அரசு, சிறப்பு விசாரணை குழு போலீசார், மாநகர போலீஸ் கமிஷனர் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் கமல்பந்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.  இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பாரபட்சம் இல்லாமல் விசாரணை

ஆபாச வீடியோ விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு போலீசார் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அதிகாரியான சவுமேந்து முகர்ஜி, இந்த வழக்குக்காக விடுமுறை எடுத்து கொள்ளவில்லை. இதற்கு முன்பும் அவர் விடுமுறை எடுத்துள்ளார். 

தற்போது மட்டும் அவர் விடுமுறை எடுத்திருப்பதை பெரிதாக்க வேண்டிய அவசியமில்லை. ஆபாச வீடியோ விவகாரம் குறித்து ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. கோர்ட்டில் அனைத்து தகவல்களும் சிறப்பு விசாரணை குழு போலீசாரால் தெரிவிக்கப்படும்.

இளம்பெண் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கும் கோர்ட்டில் விளக்கம் அளிக்கப்படும். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

வாகன ஓட்டிகள் போலீஸ் நிலையங்களுக்கு சென்று அபராத தொகை செலுத்தி, தங்களது வாகனங்களை ஓட்டிச் செல்லலாம். இதற்கு முன்பு போக்குவரத்து விதிமுறை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு இருந்தால், அந்த தொகையையும் வாகன ஓட்டிகள் செலுத்துவது கட்டாயமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பதிலளிக்க மறுப்பு

அதே நேரத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, நரேஷ்கவுடா, ஸ்ரவன் கைது செய்யப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளிக்க போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மறுத்து விட்டார். 

மேலும் பெங்களூருவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் வாகனம் நிறுத்தும் பகுதியில், போலீசார் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். 

அதற்காக வாகன நிறுத்தும் கட்டணத்தையும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.

Next Story