மூலைக்கரைப்பட்டி அருகே ஆட்டம்மை நோய்க்கு 55 செம்மறி ஆடுகள் சாவு


மூலைக்கரைப்பட்டி அருகே ஆட்டம்மை நோய்க்கு 55 செம்மறி ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 10 Jun 2021 1:17 AM IST (Updated: 10 Jun 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டி அருகே ஆட்டம்மை நோய்க்கு 55 செம்மறி ஆடுகள் பலியாகின.

இட்டமொழி, ஜூன்:
மூலைக்கரைப்பட்டி அருகே ஆட்டம்மை நோய்க்கு 55 செம்மறி ஆடுகள் இறந்தன.

ஆட்டம்மை நோய்

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாட்டை அடுத்த ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர்கள் மாரியப்பன் (வயது 60), புதியமுத்து மகன் கண்ணன் ( 35). இவர்கள் இருவரும் தலா 300 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர். அவர்கள் ஆடுகளை தினமும் காலையில் வெளியிடங்களுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, மாலையில் கிடைகளில் அடைப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அவர்கள் 2 பேரும் வளர்த்து வரும் செம்மறி ஆடுகளுக்கு ஆட்டம்மை என்ற ஒரு வகையான அம்மை நோய் தாக்கியது. செம்மறி ஆடுகளுக்கு 2 கண்களும் குருடாகி, புண் உண்டாகி விடுகின்றன. முகம் வீங்கி விடுகிறது. மூக்கில் புண் உண்டாகி அதிலிருந்து ரத்தம் வடிகிறது. பின்னர் உணவு உண்ணாமல்  ஒரு சில நாட்களில் அந்த ஆடுகள் இறந்து விடுகின்றன. இப்படி கடந்த ஒரு வாரத்துக்குள் 2 பேருக்கும் 55 ஆடுகள் இறந்துள்ளன. மேலும் 15 ஆடுகளுக்கு நோய்த் தொற்று காணப்படுகிறது.

ஆடுகள் சாவு

ஏற்கனவே கடந்த 15 நாட்களுக்கு முன்பு மருதகுளம், கோவைகுளம் பகுதிகளில் இதுபோன்ற நோய் தாக்குதல் காணப்பட்டது. அவற்றைப் பரிசோதித்துப் பார்த்ததில் ஆட்டம்மை என்னும் நோய் தாக்குதலில் ஆடுகள் இறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கால்நடை பராமரிப்புத்துறையினர் உடனடியாக செயல்பட்டு, முகாம் அமைத்து சுற்றுவட்டார ஆடுகளுக்கு தடுப்பூசிகள் போட்டனர்.

அப்போது ரெங்கசமுத்திரத்தில் மாரியப்பன், கண்ணன் ஆகியோரது ஆடுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட ஆடுகளும் தற்போது உயிரிழப்பதாக கூறியதையடுத்து மருதகுளம் கால்நடை டாக்டர் மாரியப்பன் ரெங்கசமுத்திரத்திற்கு சென்று நோய் தாக்கிய ஆடுகளை பார்வையிட்டு சிகிச்சை அளித்தார்.

கால்நடை டாக்டர் விளக்கம்

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி கால்நடை டாக்டர் ராஜூ கூறியதாவது:-
மருதகுளம் சுற்று வட்டார பகுதிகளில் செம்மறி ஆடுகள் ஒரு வகையான நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்தன. அவற்றை பரிசோதித்து, மாதிரி எடுத்து அனுப்பி பரிசோதித்ததில், ஆட்டம்மை என்னும் ஒரு வகையான அம்மை நோய் தாக்கி ஆடுகள் இறந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் ஏற்பாட்டில், ராணிப்பேட்டைக்கு சென்று தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டு சுற்றுவட்டார அனைத்து கிராமங்களிலும் சென்று கால்நடை பராமரிப்புத் துறையினர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அதற்கு பிறகு நோய்த்தொற்று குறைய ஆரம்பித்துவிட்டது. மேலும் தடுப்பூசி போட தொடங்கும்போது, ஏற்கனவே நோய்த்தொற்று தாக்குதல் அதிகம் காணப்பட்ட செம்மறியாடுகள் மட்டும் சில இறந்துள்ளன. எனவே இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக கால்நடைத்துறையினரை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story