புதுப்பொலிவுடன் காட்சி தரும் கல்லணை


புதுப்பொலிவுடன் காட்சி தரும் கல்லணை
x
தினத்தந்தி 10 Jun 2021 1:36 AM IST (Updated: 10 Jun 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை வருகிற 12-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் எதிரொலியாக கல்லணை புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. அங்கு உள்ள கரிகாலன் சிலைக்கு புதுவர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருக்காட்டுப்பள்ளி;
மேட்டூர் அணை வருகிற 12-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் எதிரொலியாக கல்லணை புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. அங்கு உள்ள கரிகாலன் சிலைக்கு புதுவர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையை வருகிற 16-ந் தேதி அதிகாலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையை ஆய்வு செய்ய உள்ளார். 
கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. 
புதுப்பொலிவுடன் காட்சி தரும் அணை
மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதன் எதிரொலியாக கல்லணை புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. கல்லணையில் உள்ள பாலங்களில் பல்வேறு மராமத்து பணிகள் நடைபெற்று உள்ளன. பாலங்களில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த பச்சை வண்ணத்தை மாற்றி ஊதா மற்றும் வெள்ளை வர்ணங்கள் பூசப்பட்டு வருகின்றன. 
கல்லணையை கட்டி தஞ்சையை வளம் கொழிக்க செய்த மாமன்னன் கரிகாலன் சிலைக்கு புதுவர்ணம் பூசும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாலங்களில் உள்ள பொறியாளர் ஆர்தர் காட்டன் சிலை, காவிரி அம்மன் சிலை, குறுமுனி அகத்தியர் சிலை, விவசாயி சிலை, ராஜராஜ சோழன் சிலை உள்ளிட்ட அனைத்து சிலைகளுக்கும் புது வர்ணம் பூசப்பட்டு வருகிறது. 
மக்கள் ஆர்வம்
கொள்ளிடம் பாலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலும் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோவிலுக்கு புது வர்ணம் பூசப்படுகிறது. பாலங்களில் வர்ணம் பூசும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. 
காவிரியில் உட்பகுதியில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. புதுவர்ணம் பூசப்பட்டு கல்லணை புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பதை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள். 

Next Story