தாரமங்கலம் பேரூராட்சியில் வாரத்துக்கு 2 நாட்கள் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் கார்மேகம் உறுதி
தாரமங்கலம் பேரூராட்சியில் வாரத்துக்கு 2 நாட்கள் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் உறுதி அளித்துள்ளார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் பேரூராட்சியில் வாரத்துக்கு 2 நாட்கள் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் உறுதி அளித்துள்ளார்.
குடிநீர் தட்டுப்பாடு
தாரமங்கலம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 11 வார்டுகளிலும் குடிநீர் போதிய அளவு கிடைப்பதில்லை என்றும், காவிரி குடிநீர் வாரம் ஒருமுறைதான் கிடைக்கிறது என்றும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனாலும் குடிநீர் தட்டு்ப்பாடு தீரவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் தாரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட தண்டுமாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள 2, 3, 6 ஆகிய வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 45) என்பவர் கொரோனா காலத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட்டு மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி உள்ளார்.
இதை ஐகோர்ட்டு ஏற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு குடிநீர் பிரச்சினை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
கலெக்டர் ஆய்வு
இதன்படி நேற்று தாரமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் பகுதிக்கு கலெக்டர் கார்மேகம் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர், பொதுமக்களிடமும், மனுதாரர் சக்திவேலிடமும் குடிநீர் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் கார்மேகம், பொதுமக்களிடம் வாரத்துக்கு 2 நாட்கள் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறி சென்றார். ஆய்வின் போது மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன், ஓமலூர் தாசில்தார் அருள்பிரகாஷ், தாரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) மேகநாதன், வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், கிராமநிர்வாக அதிகாரி செந்தில்நாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
சேலம் மாநகராட்சி
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும் போது, ‘காவிரி குடிநீர் சேலம் மாநகராட்சிக்கு முதன்முறையாக 1945-ம் ஆண்டு கொண்டு சென்றபோது இடைபட்ட பகுதிகளான பெரியசோரகை, தாரமங்கலம், பவளத்தானூர், தோப்பூர் உள்பட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த குழாய் இணைப்பை மாநகராட்சி நிர்வாகம் துண்டித்து விட்டது. எனவே அந்த இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும். காவிரி குடிநீர் வாரத்தில் 2 நாட்கள் வழங்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story