கொரோனா தொற்று குறித்து கிராமமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-கலெக்டர் திவ்யதர்சினி பேச்சு
கிராமமக்களுக்கு கொரோனா குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.
தர்மபுரி:
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் உதவி இயக்குனர் நிலையிலான மண்டல தொகுதி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதியை விட கிராமப்புற பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. கிராமப்புறங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆகிய உள்ளாட்சி பிரதிநிதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கிருமிநாசினி
ஊராட்சிமன்ற தலைவர்கள் நோய் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து குக்கிராமங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தூய்மை பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் கிராமப்புறங்களில் சேகரமாகும் குப்பைகளை அகற்ற வேண்டும். இப்பணிகளை ஊராட்சி ஒன்றிய அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் களஆய்வு செய்து கொரோனா தடுப்பு பணிகளை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தினசரி அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர்கள் நீலாபுரம் செல்வம், மகேஸ்வரி பெரியசாமி, கவிதா ராமகிருஷ்ணன், பழனிசாமி, பாஞ்சாலை கோபால், சாந்தி பெரியண்ணன், பொன்மலர் பசுபதி, உதயா மோகனசுந்தரம், சுமதி செங்கண்ணன், உண்ணாமலை குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story