கிருஷ்ணகிரியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற சத்துணவு உதவியாளர் உள்பட 3 பேர் கைது


கிருஷ்ணகிரியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற சத்துணவு உதவியாளர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 2:15 AM IST (Updated: 10 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற சத்துணவு உதவியாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி:
சத்துணவு  உதவியாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜோதி (வயது 40). இவர் தனது கணவர் முருகன் இறந்து விட்ட நிலையில் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் ஜோதி, வெள்ளிச்சந்தையை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முத்தையா (45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி வந்தார். 
கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் உள்ள ஒரு கடையில் அவர்கள் கருவாடு வாங்கினர். அப்போது முத்தையா 200 ரூபாய் நோட்டை கடைக்காரரிடம் வழங்கினார். அது கள்ள நோட்டாக இருக்குமோ என்ற அச்சத்தில், கடைக்காரர் வேறு நோட்டை தரும்படி கூறினார். மேலும், அவர் இதுகுறித்து அந்த வழியாக சென்ற போலீஸ்காரர் முருகன் என்பவரிடம் கூறினார்.
கள்ள நோட்டுகள்
இதையடுத்து முருகன், முத்தையா, ஜோதியை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எர்ரகாடு பகுதியை சேர்ந்த பூசாரி முருகன் (47) என்பவர் ரூபாய் நோட்டுகளை கொடுத்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் பென்னாகரத்தில் உள்ள முருகன் வீட்டுக்கு சென்று, அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு 2 கலர் பிரிண்டர்களும், ரூ.48 ஆயிரத்து 400 மதிப்பிலான 500, 200 மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
கைது 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்துணவு உதவியாளர் ஜோதி, முத்தையா மற்றும் கள்ள நோட்டுகளை அச்சடித்த பூசாரி முருகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், கள்ள நோட்டுகள், 2 கலர் பிரிண்டர்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைபோலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story