சேலம் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 11,091 பேரின் வாகனங்கள் பறிமுதல்


சேலம் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 11,091 பேரின் வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Jun 2021 2:23 AM IST (Updated: 10 Jun 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 11 ஆயிரத்து 91 பேரின் வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 11 ஆயிரத்து 91 பேரின் வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
போலீசார் கண்காணிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால் வருகிற 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில், ஊரடங்கின் போது பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் சேலம் மாநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தேவையில்லாமல் வெளியே வருபவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதுடன் தற்போது அவர்களுக்கு அதே இடத்தில் கொரோனா பரிசோதனையும் செய்து வருகின்றனர்.
11 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்
இதுதவிர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் மாநகரில் இதுவரை ஊரடங்கின் போது வெளியே சுற்றிய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 5 ஆயிரத்து 437 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகளவு பறிமுதல் செய்யப்பட்டது மோட்டார் சைக்கிள்கள் ஆகும்.
இதேபோல் மாவட்டத்திலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றிய 18 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 5 ஆயிரத்து 654 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். 
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை வாகன உரிமையாளர்கள் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். அதன்பிறகு வாகனங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story