சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பேட்டி


சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2021 2:36 AM IST (Updated: 10 Jun 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு மணி கூறினார்.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இதுவரை பணிபுரிந்த நிஷா பார்த்திபன் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய எஸ்.மணி பெரம்பலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு நேற்று பதவி ஏற்றார்.அதனைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மணி  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் ரவுடியிசம், வழிப்பறி, கஞ்சா விற்பனை, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை, சாராயம் காய்ச்சுதல், விற்றல் போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடந்தால் எனது தனிப்பட்ட செல்பேசி 63741 11389 எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், விவரம்  ரகசியம் காக்கப்படும்.
வழிப்பறி
மேலும் தங்கள் பகுதியில் முறையாக மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் அல்லது பயன்படுத்தப்படாத போர்வெல் குழாய்கள் இருந்தால் அதுகுறித்தும் எனது வாட்ஸ்-அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். பெரம்பலூரில் வழிப்பறி சம்பவங்களை தடுக்க தனி குற்றத் தடுப்புக்குழு அமைக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளையத்தில் ஊரக போலீஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம், வேப்பந்தட்டை போன்ற பகுதிகளில் போலீஸ் நிலையங்கள் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இம்மாவட்டத்தில் பற்றாக்குறையாக உள்ள போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூரில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியபிரகாசம் உடனிருந்தார்.
வாழ்க்கை குறிப்பு
எம்.எஸ்சி., பி.எட். படித்துள்ள எஸ்.மணி, கடலூரை சேர்ந்தவர். தனியார் பள்ளியில் ஆசிரியராகவும், மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணியாற்றிய இவர், அரசு பணியில் சேர்ந்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளரானார். பின்பு அரசு தேர்வாணைய தேர்வில் வெற்றிபெற்று 2001-ல் துணை போலீஸ் சூப்பிரண்டானார். அதனைத்தொடர்ந்து பல பொறுப்புகளை வகித்த மணி, பதவி உயர்வு பெற்று சென்னை அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்தார்.


Next Story