சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டதால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை


சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டதால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2021 5:39 AM IST (Updated: 10 Jun 2021 5:39 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டதால் மனமுடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம்,

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மலையடி வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் சுவேதா (வயது 20). இவர், செங்கல்பட்டில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.சமூக வலைத்தளங்களில் விதவிதமாக தனது புகைப்படங்களை பதிவிடுவதில் சுவேதா மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததாக தெரிகிறது. அவர் வழக்கம்போல் செல்போன் மூலம் தனது புகைப்படத்தை ‘இன்ஸ்டாகிராம்’ எனும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.

அந்த படத்தை மர்ம நபர்கள் சிலர் நவீன தொழில்நுட்பம் மூலம் ‘மார்பிங்’ செய்து மாணவி சுவேதாவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

மாணவி தற்கொலை

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், இதுபற்றி தனது வீட்டுக்கு தெரியவந்து விடுமோ? என்ற அச்சத்தில் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையில் தங்கள் மகள் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், பல இடங்களில் மாணவியை தேடி வந்தனர். அப்போதுதான் விவசாய கிணற்றில் தங்கள் மகள் சுவேதா பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டு அவரது தற்கொலைக்கு காரணமான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story