கொங்கன் வழித்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ரெயிலில் திடீர் தீ நடுவழியில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தம்


கொங்கன் வழித்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ரெயிலில் திடீர் தீ நடுவழியில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Jun 2021 6:11 AM GMT (Updated: 10 Jun 2021 6:11 AM GMT)

கொங்கன் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணியில் ஈடுபட்டு இருந்த ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக நடுவழியில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

மும்பை, 

ராய்காட் மாவட்டம் ரோகாவில் இருந்து மங்களூரு அருகே தோக்குர் வரையில் சுமார் 756 கி.மீ. தொலைவு வரை கொங்கன் ரெயில்வே நிர்வாகித்து வருகிறது. இந்த கொங்கன் ரெயில்வே வழித்தடம் மராட்டியம் உள்பட கோவா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை கடந்து செல்கிறது.

மலைக்குகைகள் மற்றும் நதிகள் இடையே செல்லும் இந்த வழித்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது

இந்தநிலையில் டீசலில் இயங்கும் மினி என்ஜின் கொண்ட பராமரிப்பு பணி ரெயில் கொங்கன் வழித்தடத்தில் ஜாரப் என்ற ரெயில் நிலையம் அருகே மின்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று காலை 9.30 மணி அளவில் பணியில் இருந்த ரெயில் என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியதுடன், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அதில் இருந்த ஊழியர்கள் வெளியே குதித்து உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பான் கருவி மூலம் ரெயில் என்ஜினில் பற்றிய தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை என கொங்கன் ரெயில்வே அதிகாரி கிரிஷ் தெரிவித்தார்.

ரெயில் என்ஜின் தீ விபத்தால் அந்த வழித்தடத்தில் செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மதுரே மற்றும் குடல் ரெயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டன. சுமார் 2 மணி நேரம் கழித்து தீ பற்றிய ரெயில் என்ஜின் அங்கிருந்து அகற்றப்பட்டது. இதன்பின்னர் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டன.


Next Story