மும்பையில் குளமாக வெள்ளம் தேங்கிய சாலைகள் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு


மும்பையில் குளமாக வெள்ளம் தேங்கிய சாலைகள் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 6:29 AM GMT (Updated: 10 Jun 2021 6:29 AM GMT)

மும்பையில் மழை வெள்ளம் தேங்கிய சாலைகள் எவை என்பது குறித்து போலீசார் தெரிவித்தனர். வெள்ளம் காரணமாக வாகன ஓட்டிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

மும்பை, 

மும்பையில் நேற்று பெய்த பருவமழை மக்களை பெரும்பாடு படுத்தி விட்டது. இதனால் பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மும்பை போலீசார் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் நேதாஜி பால்கர் சவுக், எஸ்.வி. ரோடு பகரம்பாக் சந்திப்பு, சக்கார் பஞ்சாயத்து சவுக், நீலம் சவுக், கோவண்டி, ஹிந்துமாதா சந்திப்பு, இக்பால் கமானி சந்திப்பு, தாராவி, தாராவி ரெஸ்டாரண்ட், சயான் சந்திப்பு, கிங் சர்க்கிள் ஆகிய இடங்களில் அதிக அளவுக்கு மழை நீர் தேங்கியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். அங்கு செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டனர்.

மேலும் மிலன், கார், அந்தேரி, மலாடு பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வெள்ளம் தேங்கியதால் மூடப்பட்டது.

அதேவேளையில் எஸ்.வி. ரோடு இணைப்பு சாலைகள், மேற்கு விரைவு சாலையில் மழை நீர் தேங்கவில்லை என்றும், அங்கு போக்குவரத்தில் பாதிப்பு இல்லை என்றும் மேற்கு புறநகர் போக்குவரத்து துணை கமிஷனர் சோம்நாத் கார்கே தெரிவித்தார்.

இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் குளம்போல தேங்கிய மழை வெள்ளத்தை கடக்க முடியாமல் தவித்தனர். ஏராளமான இரு சக்கர வாகனங்கள் பழுதாகின. அவற்றை தள்ளிக்கொண்டு போக முடியாமல் பலர் சாலையோரம் தங்களது ேமாட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றனர். மேலும் சிலர் தங்களது இரு சக்கர வாகனங்களை அப்படியே மழை நீரில் போட்டு சென்றனர். அந்த மோட்டார் சைக்கிள்களை கிரேன் மூலம் அகற்றும் பணியில் போலீசார், மாநகராட்சியினர் ஈடுபட்டனர்.

இதேபோல பல கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

Next Story