திருவண்ணாமலை அருகே, மோட்டார்சைக்கிள்கள் மோதலில் கீழே விழுந்த தொழிலாளி சாவு - லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியதில் பரிதாபம்


திருவண்ணாமலை அருகே, மோட்டார்சைக்கிள்கள் மோதலில் கீழே விழுந்த தொழிலாளி சாவு - லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியதில் பரிதாபம்
x
தினத்தந்தி 10 Jun 2021 4:18 PM IST (Updated: 10 Jun 2021 4:18 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கீழே விழுந்த தொழிலாளி லாரி சக்கரத்தில் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை,

கலசபாக்கம் தாலுகா சின்னகாப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 56), கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையிலிருந்து ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

வேலூர் சாலையில் சீலபந்தல் ஜங்ஷன் வழியே செல்லும்போது முன்னே சென்ற லாரியை அவர்கள் முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது கருணாகரன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் கருணாகரன் கீழே விழுந்தார். அப்போது அவர்கள் முந்த முயன்ற லாரியின் சக்கரம் கீழே விழுந்த கருணாகரன் மீது ஏறி நசுக்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருணாகரனின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story