விழிகளுக்கு விருந்து படைக்காத சுற்றுலாதலங்கள்


விழிகளுக்கு விருந்து படைக்காத சுற்றுலாதலங்கள்
x
தினத்தந்தி 10 Jun 2021 1:40 PM GMT (Updated: 10 Jun 2021 1:40 PM GMT)

கொரோனா ஊரடங்கால் குறிஞ்சி நிலங்களும், குன்றுகளும் விழிகளுக்கு விருந்து படைக்காமல் வெறிச்சோடின

உருவம் இல்லாத மனம் அனைத்தையும் உருவகபடுத்தும். மனம் உற்சாகமாக இருந்தால் வெற்றிகள் தேடி வருவதோடு, மகிழ்ச்சியும் கூடி வரும். இந்த மனம் எனும் மாயை மகிழ்ச்சியாக இருக்க பல வழிகளை கையாள்கிறோம்.

இயற்கை அன்னையின் அரவணைப்பு

அலைபாயும் மனம் அமைதியானால் உற்சாகம் தானாக பீறிடும். அந்த அமைதியும், உற்சாகமும் தரும் இடங்களில் இறைவன் சன்னதியும், இயற்கை அன்னையின் அரவணைப்பும் முக்கியமானவை. இவை இரும்பாய் இறுகிய மனதையும் இளக வைத்திடும். தளர்ந்த உடலையும் துள்ளாட்டம் போடவைக்கும்.

இத்தகைய அனுபவம் கிடைக்க புதிய தலங்களுக்கு செல்ல வேண்டும். எனவே அனைவரும் சுற்றுலா செல்கிறோம். அதில் உள்ளார்ந்த உணர்வுடன் ஆன்மாவோடு தொடர்புடைய ஆன்மிக சுற்றுலாவுக்கு செல்வோர் பலருண்டு. அதேபோல் உடலை தழுவும் தென்றலும், விழிகள் வழியே நுழையும் பசுமையும் நிறைந்த மலைவாசஸ்தலத்தை விரும்புவோரும் ஏராளம்.

மலைகளின் அரண் 

இந்த இருவகை சுற்றுலா தலங்களும் நிறைந்த தன்னிகரில்லாத மாநிலம் நம் தமிழகம். கன்னித்தமிழ் கவிதையாக மனதுக்கு இன்பம் தரும் சுற்றுலா தலங்களை கூறிக் கொண்டே போகலாம். 

அத்தகைய சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். மூன்று திசையும் விண்ணை முட்டும் மலைகளை அரணாக கொண்டு திண்டுக்கல் அமைந்துள்ளது.

இங்கு சிறந்த ஆன்மிக தலமான பழனி, முதுமை அடையாமல் இயற்கை இளவரசியாகவே வீற்றிருக்கும் கொடைக்கானல், ராமாயண தொடர்புடைய ரம்மியமான சிறுமலை, கார்மேகத்தின் கருணையால் கரையோடு அலைமோதும் அணைகள், வரலாற்றை பறைசாற்றும் திண்டுக்கல் மலைக்கோட்டை, ஆஞ்சநேயர் புகழ்பாடும் அணைப்பட்டி உள்பட ஆன்மிகமும், இயற்கையும் நிறைந்த தலங்கள் பல உள்ளன.

முருகப்பெருமானின் 3-ம் படைவீடு 

இதில் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான பழனியின் பெருமைகள் ஏராளம். இறை அருளும், அமைதியும் வேண்டி பழனியை தேடி வருவோர் கோடி பேர், என்பார்கள். 

அந்த அளவுக்கு பழனிக்கு ஆன்மிக சுற்றுலா வருவோர் அதிகம். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மராட்டியம் உள்பட பல மாநிலங்களை சேர்ந்தவர்களின் ஆன்மிக சுற்றுலாவில் தவறாமல் பழனி இடம்பெறுகிறது.

இதனால் பழனி முருகனை தரிசனம் செய்ய தினமும் பக்தர்கள் குவிந்து விடுவார்கள். அதுவே விடுமுறை நாட்களில் 3 மடங்காகி விடும். ஆனால், கொரோனா ஊரடங்கால் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் வராததால் கோவில் உண்டியலில் வருவாய் இல்லை.

அதுமட்டுமின்றி பழனி அடிவாரத்தில் பூஜை பொருட்கள், இனிப்புகள், விளையாட்டு பொருட்களின் வியாபாரிகள், சைக்கிள்கள், தட்டுகளில் வைத்து பழங்கள், கற்பூரம் விற்பனையில் ஈடுபடுவோர், வாடகை வாகன ஓட்டிகள், தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எழில்கொஞ்சும் கொடைக்கானல்

சிகரமென உயர்ந்த மலைகளின் உச்சியில் நச்சென அமைந்துள்ள எழில் கொஞ்சும் தலம் கொடைக்கானல். சில்லென்ற சாரல், இதமான குளிர், மலைஇளவரசியின் மேனியை வெண்பஞ்சு ஆடையாக மாறி மறைக்கும் மேககூட்டம் ஆகியவை கொடைக்கானலின் அடையாளம். 

அதோடு நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, தூண் பாறைகள், பைன்மரக்காடு உள்பட பல பகுதிகள் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பவை. இதை ரசிப்பதற்கு இந்தியா முழுவதில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 

கோடைவிடுமுறையில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இதற்காகவே கோடைவிழாவும், பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

சுற்றுலா பயணிகளின் வருகையால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. அதோடு சுற்றுலா தொழிலை நம்பி வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், வழிகாட்டிகள், சுற்றுலா வாகன டிரைவர்கள் என ஏராளமானோர் உள்ளனர்.

 இந்த ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வருகை தடை செய்யப்பட்டு, சுற்றுலா தொழில் முற்றிலும் முடங்கி விட்டது. அரசுக்கு மட்டுமின்றி சுற்றுலா தொழிலை நம்பி இருப்போருக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

உறங்கும் வாழ்வாதாரம் 

இதுதவிர திண்டுக்கல் மலைக்கோட்டை, சிறுமலை, பிரசித்தி பெற்ற கோவில்கள், அணைகள் போன்றவற்றுக்கும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் சுற்றுலா பயணிகளை கட்டி போட்டுவிட்டது. 

மனமும், உடலும் லயித்து உற்சாகம் அடைந்த காட்சிகளுக்கு தடை எனும் திரை போடப்பட்டு இருக்கிறது.

இதனால் சாலைகளில் வாகன அணிவகுப்பு, சுற்றுலா இடங்களில் சாரை, சாரையாக செல்லும் சுற்றுலா பயணிகள், பழம் முதல் பஞ்சாமிர்தம் வரை கூவி கூவி விற்கும் வியாபாரிகள், வழிகாட்டிகள் என எந்தவித பரபரப்பும் இல்லாமல் சுற்றுலா தலங்கள் உறங்குகிறது.

கொரோனா ஊரடங்கால் குறிஞ்சி நிலங்களும், குன்றுகளும் வெறிச்சோடின. விரிய திறந்து பார்க்கும் விழிகளுக்கு சுற்றுலாதலங்கள் விருந்து படைக்கவில்லை.

சுற்றுலா தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் மக்களின் நிலைமை பரிதாபமாகி விட்டது. ஊரடங்கால் சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி பலரின் வாழ்வாதாரமும் உறங்குகிறது. அதை திறக்க தளர்வு எனும் ஒரே சாவி தான் உள்ளது. அது எப்போது கைக்கு எட்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 ரூ.850 கோடி வருவாய் இழப்பு 
பழனி முருகன் கோவிலுக்கு மாத கார்த்திகை உள்பட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் மாதந்தோறும் சராசரியாக 1¼ லட்சம் பக்தர்கள் பழனிக்கு வருகின்றனர். தைப்பூசம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் மாதம் 3 லட்சம் பேர் வரை குவிகின்றனர்.

அதேபோல் கொடைக்கானலுக்கு சீசன் இல்லாத நாட்களில் மாதத்துக்கு 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதுவே கோடைவிடுமுறை உள்ளிட்ட சீசன் காலத்தில் மாதத்துக்கு 5½ லட்சம் பேர் குவிந்து விடுகின்றனர். இதுதவிர சிறுமலை, திண்டுக்கல் மலைக்கோட்டை உள்பட இதர சுற்றுலா தலங்களுக்கும் கணிசமான அளவில் மக்கள் வருகின்றனர்.

அந்த வகையில் ஓராண்டுக்கு 80 லட்சம் சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் மூலம் அரசுக்கு சுங்ககட்டணம், சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணம், பஸ் மற்றும் ரெயில் கட்டணம் உள்பட பல வழிகளில் வருவாய் கிடைக்கிறது. அதேபோல் வாடகை வாகனங்கள், தங்கும் விடுதிகள், வணிகம் மூலம் தனியாருக்கும், அதில் இருந்து அரசுக்கு வரியும் கிடைக்கிறது.

அதன்படி ஓராண்டுக்கு சுற்றுலா மூலம் ரூ.1,500 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், கொரோனா ஊரடங்கால் கடந்த ஓராண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 35 லட்சமாக குறைந்து விட்டது. இதனால் சுமார் ரூ.850 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
--------

Next Story