திருவெண்காடு அருகே சேதமடைந்து காணப்படும் பட்டவெளி வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
திருவெண்காடு அருகே சேதமடைந்து காணப்படும் பட்டவெளி வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருவெண்காடு,
திருவெண்காடு அருகே மங்கைமடம் கிராமத்தின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக விளங்குவது பட்டவெளி வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்கால் மூலம் மங்கைமடம், எம்பாவை, நெருஞ்சிகொள்ளை உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால் மணிகர்ணிகை ஆற்றில் இருந்து பிரிந்து மேற்கண்ட கிராமங்களில் உள்ள வயல்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. மணிகர்ணிகை ஆற்றில் இருந்து தொடங்கும் இடத்தில் வாய்க்கால் மதகு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த மதகு சேதமடைந்த காரணத்தால், பாசனத்திற்கு இந்த வாய்க்காலில் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது.
வருகிற 12-ந்் தேதி காவிரியில் தண்ணீர் திறக்க இருக்கும் நிலையில், இந்த மதகை சரி செய்தால் தான் மேற்கண்ட வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக இருக்கும். மேலும் இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் விளை நிலத்தில் தற்போது 100 ஏக்கர் அளவிற்கு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த மதகு சேதமடைந்தது குறித்து பலமுறை பொதுப்பணித்துறையிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சேதமடைந்து காணப்படும் பட்டவெளி வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story