மாவட்ட செய்திகள்

கயத்தாறு அருகே அம்மை நோயால் ஆடுகள் சாவு + "||" + goats die of measles near kayatharu

கயத்தாறு அருகே அம்மை நோயால் ஆடுகள் சாவு

கயத்தாறு அருகே அம்மை நோயால் ஆடுகள் சாவு
கயத்தாறு அருகே அம்மை நோயால் ஆடுகள் இறந்து உள்ளன.
கயத்தாறு:
கயத்தாறு அருகே அம்மை நோயால் ஆடுகள் இறந்து உள்ளன. எனவே ஆடுகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆடுகள் சாவு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்தில் உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் சந்திரன். அதே ஊரைச் சேர்ந்த காலனி தெருவில் வசித்து வருபவர் முத்துக்குமார். இவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகள். இவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தினமும் 4, 5 ஆடுகள் அம்மை நோயால் இறக்கின்றன. மேய்ச்சலுக்கு காட்டுக்கு அழைத்து செல்லும் இடத்தில் ஆடுகள் இறந்தால் காட்டிலும், தொழுவத்தில் இறந்தால் குப்பைக்கிடங்கிலும் குழி தோண்டி ஆடுகளை புதைத்து வருகின்றனர். முத்துக்குமாருக்கு சொந்தமான 40 ஆடுகளும், சந்திரனுக்கு சொந்தமான 53 ஆடுகளும் செத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஆடுகள் இறந்து வருவதால் அவர்கள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கண்ணீர்மல்க கூறியதாவது:-‌ 
வாழ்வாதாரம் இழப்பு
நாங்கள் ஆடுகள் வளர்த்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு வாரமாக எங்களது ஆடுகள், மேய்ச்சலுக்கு செல்லும் இடத்திலும், தொழுவத்திலும் இறந்து வருகின்றன. அவற்றை குழி தோண்டி புதைத்து வருகிறோம். 
தினமும் 4, 5 ஆடுகள் இறக்கின்றன. இதனால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். எங்களிடம் மீதமுள்ள ஆடுகளும் இறந்து விடுமோ என்று அச்சம் ஏற்பட்டு உள்ளது.
நிவாரணம்
எனவே ஆடுகளுக்கு உடனடியாக தடுப்பூசி போடுவதற்கு கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆடுகளை நன்றாக வளர்த்து பயன் கிடைக்கும் நேரத்தில் இதுபோன்று நோய் ஏற்பட்டு ஆடுகள் இறந்து வருகின்றன. எனவே இதை தடுக்க உரிய நேரத்தில் ஆடுகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.