தூத்துக்குடி மாவட்டத்தில் 9100 வாகனங்கள் பறிமுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களின் 9,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களின் 9,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
போதை பொருள்கள் பறிமுதல்
கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. டாஸ்மாக் கடைகள் கிடையாது. இதன் காரணமாக கள் இறக்குவது, சாராயம் காய்ச்சுவது, போதை பொருட்கள் கடத்துவது போன்ற காரியங்களில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் கழுகுமலையில் 36 மூட்டை போதை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டன. நேற்றும் கழுகுமலையில் இன்ஸ்பெக்டர் ஷோபனா, சப் இன்ஸ்பெக்டர் சாந்தினி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் மேற்கொண்ட சோதனையில் ஒரு வீட்டில் இருந்து 16 மூட்டை புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
குண்டர் சட்டம்
மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இதுவரை 685 வழக்குகள் பதிவு செய்யபட்டு 687 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை 3,800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 77 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட்டு உள்ளனர். இவர்களில் 8 பேர் போதை பொருள் வழக்கில் கைதானவர்கள். இதில் 4 பேர் புகையிலை பொருட்கள் கடத்தலில் தொடர்புடையவர்கள்.
கடந்த 24-ந்தேதி முதல் முழு ஊரடங்கின் போது தேவை இன்றி வெளியில் சுற்றி திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் இது வரை 9,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் இரு சக்கரவாகனங்களின் எண்ணிக்கை 9ஆயிரத்து 30 ஆகும். நான்கு சக்கர வாகனங்கள் 38, ஆட்டோக்கள் 39 ஆகும்.
போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
போலீசாரின் விருப்பப்படி...
காவல் துறையில் நான் பதவி ஏற்றபிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் 3 வருடத்துக்கு ஒரு முறை பணியிடமாற்றம் செய்யும்போது ஒவ்வொரு போலீசாரையும் வரவழைத்து, அவர்கள் விருப்பப்படி பக்கத்து காவல் நிலையங்களுக்கு மாறுதல் செய்யப்படுகிறார்கள். ஆயுதப்படையில் முதல் பணி நியமனத்தின் போதும் அனைவரையும் வரவழைத்து அவர்கள் விரும்பும் காவல் நிலையங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
92 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை காவல்துறையினர் 92 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற நிலையில், 2 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதி அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தபட்டு உள்ளனர். தினமும் கட்டுபாட்டு அறையில் இருந்து அவர்களுடன் பேசி உடல் நலம் விசாரித்து வருகிறோம். நானும் பேசி இருக்கிறேன். எனவே அனைவரும் திருப்தியுடன் உள்ளனர்.
ஊரடங்கு தடையை மீறி தொழிற்சாலைகளை அதிகாலை 3 மணிமுதல் 6 மணி வரை இயக்குவதாக தகவல் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் நடவடிக்கை என்பது குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நடக்கவில்லை. மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. கோவில்பட்டியில் காவலர் குடியிருப்பை நான் நேரில் பார்வையிட்டேன். ஒரு சில வீடுகளில் மழை தண்ணீர் ஒழுகுகிறது. சுவரில், மேல்பூச்சு சரி இல்லாமல் இருக்கிறது. காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் அந்த பாதிப்புகள் விரைவில் சரி செய்யப்படும். முற்றிலும் வசிக்க முடியாதவர்களுக்கு வேறு குடியிருப்பு ஒதுக்கி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story