10 நாட்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தம்


10 நாட்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Jun 2021 3:17 PM GMT (Updated: 10 Jun 2021 3:17 PM GMT)

பரமக்குடி பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டதால் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு வாங்கும் அவலநிலை உருவாகி உள்ளது.

பரமக்குடி, 
பரமக்குடி பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டதால் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு வாங்கும் அவலநிலை உருவாகி உள்ளது.
ராட்சத குழாய்

பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய வைகை ஆற்றில் ராட்சத ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.அதில் இருந்து பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குடிநீரை ஏற்றி வைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. 
காவிரி கூட்டுக்குடிநீர் வந்ததில் இருந்து வைகை ஆற்றில் இருந்து வழங்கப்படும் நகராட்சி குடிநீர் வினியோகம் பராமரிப்பு இல்லாமல் அடியோடு நிறுத்தப்பட்டு உள்ளது. காவிரி கூட்டுக் குடிநீரை மட்டுமே நம்பி இருக்கும் நிலை உருவாகி உள்ளது. தற்போது காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கடந்த 10 நாட்களாக பரமக்குடி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 
சிரமம்

இதனால் பொது மக்கள் குடிநீருக்காக அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வேறுவழியின்றி வண்டிகளில் கொண்டுவரப்படும் தண்ணீரை ஒரு குடம் ரூ.10  கொடுத்து வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். அதையும் வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 
கொரோனா ஊரடங்கால் தொழில் இல்லாமல் தவிக்கும் கூலி தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ்உள்ளவர்கள், தினமும் பணம் கொடுத்து குடிநீர் வாங்க சிரமப்படும் நிலை அதிகரித்துள்ளது.

Next Story