மேட்டூர் அணை வருகிற 12-ந் தேதி திறப்பு: தலைஞாயிறில், குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம் - கடைமடைக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என நம்பிக்கை
மேட்டூர் அணை வருகிற 12-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு தலைஞாயிறில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த ஆண்டு கடைமடைக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
வாய்மேடு,
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்துக்காக வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். நாற்றங்கால் அமைப்பது, வயலை உழவு செய்வது என ஆரம்ப கட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தலைஞாயிறு, காடந்தேத்தி, ஆய்மூர், வடுகூர், மணக்குடி உள்ளிட்ட பகுதிகள் கடைமடை பகுதியாகும். இந்த ஆண்டு 5 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடிகள் நடைபெற உள்ளன.
விவசாயிகள் பலர் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை நாற்றங்கால் அமைத்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் உரமிடும் ்பணிகளையும் விவசாயிகள் ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் கடைமடை பகுதியில் நடைபெறும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வந்து சேரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story