விலங்குகளுக்கும் கொரோனா பரவுவதால் கால்நடைகளுக்கு காப்பீடு செய்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் - ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


விலங்குகளுக்கும் கொரோனா பரவுவதால் கால்நடைகளுக்கு காப்பீடு செய்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் - ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jun 2021 9:32 PM IST (Updated: 10 Jun 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

விலங்குகளுக்கும் கொரோனா பரவுவதால் கால்நடைகளுக்கு காப்பீடு செய்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் உள்பட 124 பேருக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், சேலை, சானிடைசர், முக கவசம் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது விலங்குகளுக்கும் பரவி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு உப தொழிலாக உள்ளது.

கால்நடைகளுக்கு அரசே பிரீமியம் தொகையை செலுத்தி காப்பீடு செய்யும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இது குறித்து விவசாயிகள், கால்நடை வளர்ப்போரிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளது.எனவே அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீடு செய்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்டால் கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரத்திற்கு பேருதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், ஒன்றியக்குழுத் தலைவர் கமலா அன்பழகன், கூட்டுறவு மொத்த விற்பனை சங்க தலைவர் வக்கீல் நமச்சிவாயம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல கோடியக்கரை, கோடியக்காடு, ஆதனூர், நெய்விளக்கு, தேத்தாகுடி, தெற்கு, தேத்தாகுடி வடக்கு,செம்போடை, புஷ்பவனம், பெரியகுத்தகை ஆகிய ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உள்பட 150 பேருக்கும், ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம் கிழக்கு, பஞ்சநதிக்குளம் மேற்கு, தென்னடார், தகட்டூர், வாய்மேடு, தாணிக்கோட்டகம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர் உள்பட 200 பேருக்கும் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. தனது சொந்த பணத்தில் இருந்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

Next Story