மதுபாட்டில்கள் கடத்தி வந்தபோது பிடிபட்ட பா.ஜனதா பிரமுகர் உள்பட 2 பேர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பியோட்டம் குடவாசலில் பரபரப்பு
குடவாசலில், மதுபாட்டில்கள் கடத்தி வந்தபோது பிடிபட்ட பா.ஜனதா பிரமுகர் உள்பட 2 பேர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடவாசல்:-
குடவாசலில், மதுபாட்டில்கள் கடத்தி வந்தபோது பிடிபட்ட பா.ஜனதா பிரமுகர் உள்பட 2 பேர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாகன சோதனை
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வடகண்டம் பாலம் பகுதியில் சம்பவத்தன்று குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கொரோனா ஊரடங்கையொட்டி வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களிடம் ஒரு அட்டைப்பெட்டி இருந்தது. அதை போலீசார் சோதனை செய்தபோது அதில் 40 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
40 மதுபாட்டில்கள் கடத்தல்
இதையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குடவாசல் அருகே உள்ள காவனூரை சேர்ந்த மதுசூதனன்(வயது 37), இலையூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்தி(34) ஆகியோர் என்பதும், 2 பேரும் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் சென்று 40 மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, 2 பேரையும் குடவாசல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பியோட்டம்
அப்போது மதுசூதனன், கார்த்தி ஆகிய 2 பேரும் வீட்டுக்கு போன் செய்துவிட்டு வருகிறோம் என்று கூறி விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்றனர். ஆனால் அரை மணி நேரம் ஆகியும் இருவரும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வெளியே சென்று பார்த்தபோது இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பா.ஜனதா பிரமுகர்
தப்பி ஓடியவர்களில் ஒருவரான மதுசூதனன், பா.ஜனதா விவசாய அணி மாவட்ட செயலாளராக உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
மதுபாட்டில்களை கடத்தி வந்தபோது பிடிபட்ட 2 பேர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story