விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு
x
தினத்தந்தி 10 Jun 2021 10:17 PM IST (Updated: 10 Jun 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் இறந்தனர். புதிதாக 404 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38,874 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 298 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 34,338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 4,238 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கண்டாச்சிபுரத்தை சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டியும், விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனத்தை சேர்ந்த 31 வயதுடைய வாலிபரும், பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய நபரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 298-ல் இருந்து 302 ஆக உயர்ந்துள்ளது.

404 பேருக்கு தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் புதிதாக 404 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,278 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,935 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 4,041 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story