கூடலூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து 62 மதுபாட்டில்கள் திருட்டு
கூடலூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து 62 மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
கூடலூர்,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர பிற கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. மேலும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சூண்டி, பார்வுட் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. அடர்ந்த வனங்கள் மற்றும் தேயிலை தோட்டங்கள் அருகில் இருப்பதால் பாதுகாப்பு கருதி பார்வுட் டாஸ்மாக் கடையில் இருந்த மதுபாட்டில்களை கிடங்குக்கு அதிகாரிகள் எடுத்து சென்றனர். மேலும் சூண்டி டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை அங்கேயே தனி அறையில் பாதுகாப்பாக வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள் அந்த அறையின் பூட்டைஉடைத்து, அங்கிருந்த 62 மதுபாட்டில்களை திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.11 ஆயிரம் ஆகும். இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் நியூகோப் போலீசில் புகார் செய்யப்பட்டது.
பின்னர் டாஸ்மாக் மேலாளர் சேகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், கூடலூர் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் நேரில் சென்று, டாஸ்மாக் கடை மற்றும் அதன் அறைகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story