மாவட்ட செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்திற்கு 9442 மெட்ரிக் டன் அரிசி வந்தது + "||" + 9442 metric tons of rice came to Viluppuram

விழுப்புரம் மாவட்டத்திற்கு 9442 மெட்ரிக் டன் அரிசி வந்தது

விழுப்புரம் மாவட்டத்திற்கு 9442 மெட்ரிக் டன் அரிசி வந்தது
குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்திற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு 9,442 மெட்ரிக் டன் அரிசி வந்தது.
விழுப்புரம், 

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அரசு முன்வந்தது. இதையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பிரதம மந்திரியின் கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 80 கோடி மக்களுக்கு 8 மாதங்களாக ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசியை வழங்கியது.
தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் இந்த திட்டம் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார்.

9,442 மெட்ரிக் டன் 

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி பெறும் 5 லட்சத்து 93 ஆயிரத்து 26 குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்திற்கு 9,442 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த அரிசி, சென்னையில் இருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் அரிசி மூட்டைகள், லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

விரைவில் வழங்கப்படும்

இதுபற்றி மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மே, ஜூன் மாதம் வழங்க வேண்டிய அரிசியை ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக 9,442 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த அரிசி மூட்டைகள் விழுப்புரம் வந்துள்ளது. இந்த அரிசி, ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விரைவில் வழங்கப்படும். இதேபோல் தமிழக அரசு அறிவித்துள்ள 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.