மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை. போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பேட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி கூறினார்.
திருப்பத்தூர்
பொறுப்பேற்பு
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த விஜயகுமார் செங்கல்பட்டுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை சைபர் கிரைம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சிபிசக்கரவர்த்தி திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
போலீஸ சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி வேலூர் மாவட்டம் குடியாத்தம் உதவி போலீஸ் சூப்பிண்டாகவும், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்
தற்போது கொரோனா தொற்றுக்காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து, அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இளைஞர்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வாகனத்தில் சுற்றி திரியக்கூடாது. ஊரடங்கை பொதுமக்களும், வியாபாரிகளும் கடைபிக்க வேண்டும்.
முககவசம் அணியாமல் யாரும் வெளியில் செல்லக்கூடாது. மேலும் திருப்பத்தூர் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடும் நடவடிக்கை
மாவட்டம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடாக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக தெரியவருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மணல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க எந்தநேரமும் என்னை சந்திக்கலாம். மேலும் மாவட்டத்தில் நடைபெறும் சம்பவங்களை 24 மணி நேரமும் செயல்படும் 9442992526 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு எந்த நேரம் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story