திருவண்ணாமலை; கொரோனா தொற்று ‘ஜீரோ’ என்ற நிலையை உருவாக்க வேண்டும்-அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று ‘ஜீரோ’ என்ற நிலையை உருவாக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று ‘ஜீரோ’ என்ற நிலையை உருவாக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
குறைந்து வருகிறது
கொரோனா தொற்று முதல் அலை வந்த பொழுது வேலைக்கு செல்ல முடியாமல் பல குடும்பங்கள் உணவு இல்லாமல் தத்தளித்தது. இதையெல்லாம் உணர்ந்த முதல்- அமைச்சர் இந்த கொரோனா காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.4 ஆயிரம் அறிவித்து 2 தவணையாக சுமார் 2 கோடியே 7 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறும் வகையில் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை இலவசமாக வழங்க உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நாளடைவில் நமது மாவட்டத்தில் இந்நோய் தொற்றே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
கொரோனா தொற்று குறைவதற்கு காரணமாக இருந்த, 24 மணி நேரமும் பணியாற்றிய மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் அரசின் சார்பில் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
‘ஜீரோ’ என்ற நிலையை உருவாக்க வேண்டும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து மருத்துவமனைகள், கொரோனா பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று ‘ஜீரோ’ என்ற நிலையை உருவாக்க அனைத்து அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை முககவசம், பிளீச்சிங் பவுடர் உள்பட கொரோனா தடுப்பு உபகரணங்கள் போதிய அளவிற்கு இருப்பில் உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் முககவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது என அரசின் வழிமுறைகளை பின்பற்றாததாக 60 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 கோடியே 35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தடுப்பூசி
சுமார் 1 லட்சத்து 32 ஆயிரத்து 325 நபர்கள் முதல் தடுப்பூசியை செலுத்தி இருக்கிறார்கள். 31 ஆயிரத்து 557 நபர்கள் 2-வது தடுப்பூசியை செலுத்தி கொண்டு உள்ளனர்.
தடுப்பூசி செலுத்தி கொள்வதில் 15 நாட்களுக்கு முன்பு நமது மாவட்டம் பின்தங்கி இருந்தது. ஓரிரு நாட்களில் தடுப்பூசிகள் வந்து விடும்.
தடுப்பூசி வந்த பிறகு மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கூடுதல் முயற்சிகள் எடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்வதில் திருவண்ணாமலை மாவட்டம் முதல் 3 இடங்களில் உள்ளது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
கொரோனா தொற்றின் 3-ம் அலை வந்தால் அதனை தடுக்க என்னென்ன தேவைகள் தேவை என்று கூறினால் அரசிடம் இருந்து அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
முன்னதாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுப்பணித் துறை அமைச்சருக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தொடர்ந்து சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குடும்ப அட்டை பெறாத 332 தி்ருநங்கைகளுக்கு கொரோனா கால நிவாரண தொகை தலா ரூ.2 ஆயிரம், 275 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், வருவாய்த்துறை சார்பில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 4 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா, பட்டா மாறுதல் ஆகிய அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
Related Tags :
Next Story