ஊட்டி, கூடலூரில் சித்த மருத்துவ மையங்கள் தொடக்கம்
ஊட்டி, கூடலூரில் சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு 200 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. முதல் அலையை விட 2-வது அலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கடந்த ஓரிரு நாட்களாக பூரண குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் என 14 மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா போன்ற இந்திய மருத்துவ முறையில் மாவட்டங்கள் தோறும் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் நீலகிரியில் நேற்று முதல் கொரோனா சிகிச்சைக்காக 2 சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது.
ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் தயார் நிலையில் இருக்கிறது. அங்கு கொரோனா நோயாளிகள் 46 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி சித்த மருத்துவ மையமாக செயல்பட தொடங்கி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:- கூடலூரில் தொடங்கப்பட்ட சித்த மருத்துவ மையத்தில் கொரோனா உறுதியான குழந்தைகள், பெண்களுக்கு என தனியாக சிகிச்சை அளிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த மையத்தில் 100 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறி தென்பட்டவர்கள் சித்த மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஊட்டி, கூடலூரில் மொத்தம் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அலோபதி டாக்டர்கள் அறிவுரையுடன் இந்திய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோயாளிகளுக்கு அதற்கான மருந்துகள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்த ஊழியர்கள் வழங்கி வருகின்றனர். அதனை பயன்படுத்துவது மற்றும் உட்கொள்ளும் முறை குறித்து விளக்கப்படுகிறது. இதன் மூலம் பூரண குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story