ஊரடங்கை மீறிய 13 கடைகளுக்கு ‘சீல்’
போளூர், வந்தவாசி, கண்ணமங்கலத்தில் ஊரடங்கை மீறிய 13 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
போளூர்
போளூரில் ஆய்வு
கொரோனாவை தடுக்க தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. போளூரில் ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா? என வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறையினர் தாசில்தார் சாப்ஜான் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர் ரவிக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத் ஆகியோர் கொண்ட குழுவினர் போளூரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது போளூர் சுப்பிரமணியம் தெரு, ெரயில்வே ஸ்டேஷன் ரோடு, பஜார் வீதி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த 7 கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், மாறன் மற்றும் போலீசார் சேத்துப்பட்டு, நெடுங்குளம், தேவிகாபுரம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பல்வேறு இடங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்காத 11 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து ரூ.5,500 வசூலிக்கப்பட்டது. மேற்கண்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த 40 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்
சேத்துப்பட்டு தாலுகா அளவில் தாசில்தார் பூங்காவனம், சமூக நல தாசில்தார் ஹரிதாஸ், மண்டல துணை தாசில்தார் கோமதி மற்றும் வருவாய்த்துறையினர் தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது முக கவசம் இல்லாமல் சுற்றித்திரிந்தவர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ.3,500 வசூல் செய்யப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசியில், ஊரடங்கை மீறி அனுமதிக்காத கடைகளை திறந்து சிலர் வியாபாரம் செய்வதாக போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வந்தவாசி நகர பகுதியான அச்சரப்பாக்கம் சாலையில் செல்போன் கடை, குளர்பானக்கடையை திறந்து வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் வாடிக்கையாளர்கள் அதிகம் கூடும் வகையில் வியாபாரம் செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் 2 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி ஜவுளிகடைகள், செருப்பு கடைகள் உள்பட பல்வேறு கடைகளை திறந்து வியாபாரம் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று, திறந்து இருந்த 4 ஜவுளிகடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
Related Tags :
Next Story