கடன் பிரச்சினையில் கடத்தப்பட்ட சிறுவன் கோவையில் மீட்பு


கடன் பிரச்சினையில் கடத்தப்பட்ட சிறுவன் கோவையில் மீட்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 11:00 PM IST (Updated: 10 Jun 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

கடன் பிரச்சினையால் காரில் கடத்தப்பட்ட தர்மபுரி சிறுவனை கோவையில் போலீசார் மீட்டனர். இதுெதாடர்பாக கார் புரோக்கரை கைது செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 30), டிரைவரான இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் இளைய மகன் ஹரிஷ் (வயது 7) நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அவன் மாயமானான். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசாரிடம் புகார் அளித்தார். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ராஜசேகரின் வீடு உள்ள பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது பழைய கார்களை வாங்கி விற்கும் கோவையைச் சேர்ந்த சரவணகுமார் (24) என்பவர் சிறுவன் ஹரிசை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது

இதையடுத்து போலீசார் சரவணகுமாரின் செல்போன் சிக்னல் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சரவணகுமார் கோவை மாவட்ட பகுதியில் இருப்பது தெரிய வந்தது. உடனே தர்மபுரி போலீசார் கோவை சென்று சரவணகுமாரை பிடித்தனர்.

அவர் கடத்தி சென்ற சிறுவனையும் மீட்டனர். பின்னர் தர்மபுரிக்கு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சரவணகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பணம் கொடுக்கல் வாங்கல் அதாவது கடன் பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடந்து இருப்பது தெரியவந்தது.

ராஜசேகர் கோவையில் தங்கி வாடகை கார்களை ஓட்டி வந்துள்ளார். அப்போது பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் புரோக்கரான சரவண குமாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜசேகர், சரவணகுமாரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் கடனாக பெற்றதாகவும், அந்த தொகையை திருப்பி கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தர்மபுரிக்கு வந்துவிட்ட ராஜசேகரிடம் பணத்தை கேட்டு பெற சரவணகுமார் நேற்று முன்தினம் காரில் தர்மபுரிக்கு வந்துள்ளார். அப்போது பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் ஹரிசை காரில் கோவைக்கு கடத்திச் சென்றது போலீசாரின் விசாரணையில் உறுதியானது. 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தர்மபுரி டவுன் போலீசார், சரவணகுமாரை கைது செய்தனர். தர்மபுரியில் இருந்து காரில் கோவைக்கு கடத்தப்பட்ட சிறுவனை போலீசார் ஒரே நாளில் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story