தனித்தனி சம்பவம் மின்சாரம் தாக்கி செவிலியர், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி


தனித்தனி சம்பவம் மின்சாரம் தாக்கி செவிலியர், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2021 11:05 PM IST (Updated: 10 Jun 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம், விருத்தாசலம் அருகே நடந்த தனித்தனி சம்பவத்தில் மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர், செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லிக்குப்பம், 

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்

நெல்லிக்குப்பம் அருகே உள்ள வான்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சுமன்நாத் (வயது 20). இவர் கடலூர் குமராபுரத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று அவரது வீட்டில் இருந்த மின்விசிறி இயங்கவில்லை என தெரிகிறது. இதனால் சுமன்நாத் சுவிட்ச் பாக்சில் கை வைத்து, சுவிட்சை அழுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சுமன்நாத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவிலியர்

விருத்தாசலம் அருகே உள்ள பாலக் கொல்லையை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் சிவரஞ்சனி (வயது 24). டிப்ளமோ நர்சிங் படித்துள்ள இவர், சென்னை போரூர்ராமச்சந்திரா மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி, தனது சித்தப்பா மகன் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதற்கிடையே சம்பவத்தன்று தனது வீட்டில் உள்ள குடிநீர் மோட்டாரை இயக்குவதற்காக, சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவரஞ்சனியை மின்சாரம் தாக்கியதில், அவர், மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சிவரஞ்சனி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story