வாய்க்கால்களை தூர்வாருவதன் மூலம் 9,704 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் மாவட்ட கலெக்டர் தகவல்


வாய்க்கால்களை தூர்வாருவதன் மூலம் 9,704 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2021 5:44 PM GMT (Updated: 10 Jun 2021 5:44 PM GMT)

புகளூர்-நெரூர் வாய்க்கால்களை தூர்வாருவதன் மூலம் 9,704 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கூறினார்.

கரூர்
கலெக்டர் ஆய்வு
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்டத்தில் வாரிகள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
 தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறந்து விடுகிறார். அவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்வதற்காக கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்டத்தில் உள்ள நீர்வழித்தடங்களில் 2 வாய்க்கால்கள் மற்றும் 8 வடிகால் வாரிகளை தூர்வாருவதற்காக ரூ.1 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 
9,704 ஏக்கர் பாசன நிலங்கள்
இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் புகளூர் மற்றும் நெரூர் ஆகிய பாசன வாய்க்கால்கள், வதியம், கே.பேட்டை, மருதாண்டம், பனையூர், இனுங்கூர், சிவாயம், வளையப்பட்டி, குளித்தலை ஆகிய 8 வடிகால் வாரிகளை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
புகளூர் மற்றும் நெரூர் பாசன வாய்க்கால்கள் தூர்வாருவதன் மூலம் கடைமடை வரை தங்கு தடை இன்றி தண்ணீர் செல்ல இயலும். இதன் மூலம் 5 கிராமங்களைச் சேர்ந்த 9,704 ஏக்கர் பாசன நிலங்கள் முழுவதும் பாசன வசதி பெறுவது உறுதி செய்யப்படும்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
மேற்கண்ட புகளூர் மற்றும் நெரூர் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியினை காவிரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்புக்கு முன்பு முடிக்க வேண்டும் என்றும், மேலும் வடிகால் வாரிகள் தூர்வாரும் பணியினை பருவ மழைக்கு முன்பு முடிக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் தெரிவித்தார்
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்ட உதவிப்பொறியாளர்கள் ஸ்ரீதர், கார்த்திக் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story