14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய 80 ஆயிரம் தொகுப்புகள் வந்தன


14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய 80 ஆயிரம் தொகுப்புகள் வந்தன
x
தினத்தந்தி 10 Jun 2021 11:14 PM IST (Updated: 10 Jun 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்திற்கு14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய 80 ஆயிரம் கொரோனா சிறப்பு நிவாரண பொருள் தொகுப்புகள் வந்து சேர்ந்தன.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்திற்கு14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய 80 ஆயிரம் கொரோனா சிறப்பு நிவாரண பொருள் தொகுப்புகள் வந்து சேர்ந்தன.
14 வகை மளிகை பொருட்கள்
தமிழக முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாளான 3-ந் தேதியன்று கொரோனா பாதிப்பு நிவாரண உதவியாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், கொரோனா நோய்த்தொற்று நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 2-வது தவணை 2 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 
இதேபோல் தமிழகம் முழுவதும் வருகிற 15-ந் தேதி முதல் 14 வகை மளிகை பொருட்களான கோதுமை மாவு ஒரு கிலோ, ரவை ஒரு கிலோ, உப்பு ஒரு கிலோ, சர்க்கரை அரை கிலோ, உளுத்தம் பருப்பு அரை கிலோ, புளி 250 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், சீரகம், கடுகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் தலா 100 கிராம், டீ தூள் 2 (100 கிராம்), குளியல் சோப்பு 1 (125 கிராம்) துணி சோப்பு 1 (250 கிராம்) ஆகிய தொகுப்புகளும் கொரோனா நோய்தொற்று நிவாரண இரண்டாவது தவணை 2 ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்படுகிறது.
5½ லட்சம் கார்டுகள்
இந்தத் திட்டத்தின்படி குமரி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 51 ஆயிரத்து 279 அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெற உள்ளனர்.
வருகிற 15-ந் தேதி முதல் கொரோனா சிறப்பு நிவாரண தொகுப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த 14 வகையான மளிகைப் பொருட்களில் குமரி மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு டீத்தூள் மற்றும் மளிகை பொருட்களை வைத்து தருவதற்கான பைகளும் குமரி மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தன.
முதலில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை குமரி மாவட்டத்திற்கு வழங்க இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மளிகை பொருட்களை விரைவாக வழங்குவதற்கு ஏதுவாக மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
80 ஆயிரம் தொகுப்புகள்
அதன்படி சென்னை மற்றும் தூத்துக்குடியிலிருந்து குமரி மாவட்டத்திற்கு 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. நேற்றுஒரு லாரியில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் குமரி மாவட்டத்திற்கு வந்தது. அவை காப்புக்காடு குடோனில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. 
நேற்று வரை குமரி மாவட்டத்துக்கு 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய 80 ஆயிரம் தொகுப்புகள் வந்து சேர்ந்துள்ளன. அவை நாகர்கோவில் கோணம், ஆரல்வாய்மொழி, காப்புக்காடு, உடையார் விளை ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 4 லட்சத்து 71 ஆயிரத்து 279 ரேஷன் கார்டுகளுக்கான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வர வேண்டியது உள்ளது. அவை இன்னும் ஒரு சில நாட்களில் அனுப்பி வைக்கப்படும் எனவும், அரசு அறிவித்தபடி வருகிற 15-ந் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வினியோகம் செய்யப்படும்.
 இதற்காக இன்று முதல் டோக்கன் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story