ஓய்வுபெற்ற விஞ்ஞானி, கல்லூரி பேராசிரியையிடம் ரூ.15 லட்சம் அபேஸ்


ஓய்வுபெற்ற விஞ்ஞானி, கல்லூரி பேராசிரியையிடம் ரூ.15 லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 10 Jun 2021 11:30 PM IST (Updated: 10 Jun 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓய்வுபெற்ற விஞ்ஞானி, கல்லூரி பேராசிரியையிடம் ரூ.15 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓய்வுபெற்ற விஞ்ஞானி, கல்லூரி பேராசிரியையிடம் ரூ.15 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
ஓய்வு பெற்ற விஞ்ஞானி
மார்த்தாண்டம் அருகே பாகோடு குளவிளையை சேர்ந்தவர் பாலாசிங் (வயது 68). இவர் தேசிய வானூர்தி ஆய்வக விஞ்ஞானியாக பணிபுரிந்து  ஓய்வு பெற்றவர். இவருக்கு லலிதா (65) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் அமெரிக்காவிலும், மகள் கேரளாவிலும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலாசிங்கின் வீட்டு போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாகவும், பாலாசிங்கின் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாகவும், புதிய அட்டை ெபறுவதற்கு ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்டுள்ளார். இதை நம்பிய பாலாசிங் அவர் கேட்ட தகவல்கள் அனைத்தையும் கூறியுள்ளார். பின்னர் அந்த நபர் இணைப்பை துண்டித்து விட்டார்.
அதன்பிறகு சந்தேகம் அடைந்த அவர் வங்கிக்கு சென்று கணக்கை சரி பார்த்த போது ரூ.12 லட்சத்து 24 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 
ரூ.3 லட்சம் மோசடி
மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியை சேர்ந்தவர் ஆனின் ஜான் (75). இவர் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. நேற்று முன்தினம் இவரது வீட்டு டெலிபோனில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். அட்டை காலாவதியாகி விட்டதாக கூறினார். அதை புதுப்பிக்க ரகசிய எண் உள்ளிட்ட தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து ஆனின் ஜான் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். இந்த புகார்களின் அடிப்படையில் மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
விழிப்பாக இருக்க வேண்டுகோள்
மார்த்தாண்டம் பகுதிகளில் மர்ம நபர்கள் முதியோர்களை குறிவைத்து இதுபோன்ற வங்கி மோசடிகளை நடத்தி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் விழிப்பாக இருந்து இது போன்ற அழைப்புகள் வரும் போது வங்கிகளுக்கு நேரடியாக சென்று விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story