கிணத்துக்கடவு, நெகமம் பேரூராட்சிகளில் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை


கிணத்துக்கடவு, நெகமம் பேரூராட்சிகளில் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை
x
தினத்தந்தி 10 Jun 2021 11:33 PM IST (Updated: 10 Jun 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு, நெகமம் பேரூராட்சிகளில் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சப்-கலெக்டர் உத்தரவின்பேரில் வீடு, வீடாக தன்னார்வலர்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது. 

அதன்படி கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் 30 தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று  காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு உள்பட ஏதேனும் கொரோனா அறிகுறி உள்ளதா? தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதா? என்று கணக்கெடுத்து வருகின்றனர். இந்த பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் கண்காணித்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் காய்ச்சல் பரிசோதனை பணிகளை தாசில்தார் சசிரேகா பார்வையிட்டு, அறிவுரை வழங்கினார். அப்போது அவருடன் கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் சிவகுமார் உள்பட வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

இதேபோல நெகமம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தன்னார்வலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து நெகமம் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் கூறுகையில், நெகமம் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக  சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதில், கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மருத்துவ குழுவினர் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story