பாறைகளை தகர்க்க வெடி வைத்தபோது வீட்டுச்சுவர்களில் விரிசல், கிராம மக்கள் முற்றுைக
துருகம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகளை தகர்க்க வெடி வைத்தபோது ஏற்பட்ட பயங்கர தீப்பிழம்பால் அருகில் இருந்த மரங்கள், செடி, கொடிகள் தீப்பிடித்து எரிந்தன. கிராம மக்கள் குவாரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கண்ணமங்கலம்
மலையில் உள்ள கல்குவாரி
கண்ணமங்கலம் அருகே ராமசாணிக்குப்பம் என்ற துருகம் கிராமம் உள்ளது. கிராமத்தில் நெசவுத்தொழிலாளர்கள் பலர் உள்ளனர். கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிராமத்தில் உள்ள மலையின் பின்பக்கம் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
அந்த மலையில் அடிக்கடி பாறைகளை வெடி வைத்து தகர்க்கும்போது, துருகம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பயங்கர அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மலையில் உள்ள கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முற்றுைக போராட்டம்
நேற்று மாலை மலையில் அளவுக்கு அதிகமாக வெடிமருந்தை பயன்படுத்தி பாறைகளை தகர்த்துள்ளனர். அப்போது சிதறிய பாறைகளில் இருந்து தீப்பிழம்பு ஏற்பட்டு, அருகில் மலையில் இருந்த மரங்கள், செடி, கொடிகள் தீப்பிடித்து எரிந்தன.
மேலும் வீடுகளில் பயங்கர அதிர்வு ஏற்பட்டதால் சுவர்களில் விரிசல் உண்டானது. ஒரு சில வீடுகளில் இருந்த டி.வி.க்கள் சேதம் அடைந்தன. பாத்திரங்கள் உருண்டோடின. பதற்றமடைந்த கிராம மக்களும், குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டனர்.
கல்குவாரியில் எரிந்த தீயை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, அந்தக் கல்குவாரிக்கு சொந்தமான அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தி, கல்குவாரியை மூட வேண்டும் எனக் கோரிக்ைக விடுத்தனர்.
பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். குவாரியை தடை செய்ய மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்ய வேண்டும் என்று கிராம மக்களிடமும் அதுவரை குவாரி இயக்க வேண்டாம் என்று குவாரி நிர்வாகத்திடமும் கூறினர்.இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தச் சம்பவத்தால் துருகம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story