சாராயம் காய்ச்சுவதை தடுக்க ‘ட்ரோன் கேமரா’ மூலம் கண்காணிப்பு. மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி. தகவல்


சாராயம் காய்ச்சுவதை தடுக்க ‘ட்ரோன் கேமரா’ மூலம் கண்காணிப்பு. மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி. தகவல்
x
தினத்தந்தி 11 Jun 2021 12:07 AM IST (Updated: 11 Jun 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க ‘ட்ரோன் கேமரா’ மூலம் கண்காணிக்கப்பட உள்ளது என்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி. லோகநாதன் தெரிவித்தார்.

வேலூர்

ஆபரேசன் வின்ட்

தமிழகத்தில் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி பிறமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தி வருவது மற்றும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை தடுக்கும் பணியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட அமலாக்கப்பிரிவு டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

மேலும் ‘ஆபரேசன் வின்ட்' என்ற திட்டத்தில் மது, சாராய விற்பனையை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த திட்டம் வருகிற 22-ந் தேதி வரை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் ‘ஆபரேசன் வின்ட்’ திட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் மது, சாராய விற்பனை தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் மது, சாராய விற்பனையை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஐ.ஜி. லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசந்திரன், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் இதுவரை மது, சாராயம் விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நபர்களின் விவரம், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், சாராயம், சாராய ஊறல் குறித்தும், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தனிப்படையினரின் செயல்பாடுகள் பற்றியும் ஐ.ஜி. கேட்டறிந்தார்.
‘ட்ரோன் கேமரா’ மூலம் கண்காணிப்பு

இது குறித்து ஐ.ஜி. லோகநாதன் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட இடங்கள் ஜி.பி.எஸ். மூலம் வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணி மற்றும் ரோந்து பணி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சாராய வியாபாரிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Next Story