நெல்லை தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை


நெல்லை தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
x
தினத்தந்தி 11 Jun 2021 12:30 AM IST (Updated: 11 Jun 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் வெள்ள அபாய ஒத்திகை நடத்தினர்.

நெல்லை:
நெல்லை தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் வெள்ள அபாய ஒத்திகை நடத்தினர்.

தென் மேற்கு பருவமழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது வெள்ள அபாயத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக தீயணைப்பு துறையினர் ஒத்திகை நடத்த கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி நெல்லை நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் பேராட்சி அம்மன் கோவில் திடலில் நேற்று பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

செயல் விளக்கம்

பருவ மழையின் போது திடீர் வெள்ளம் ஏற்பட்டால் எவ்வாறு பொதுமக்கள் தங்களை காப்பாற்றி கொள்வது அல்லது தீயணைப்பு துறையின் உதவியை விரைந்து எவ்வாறு பெறுவது, தீயணைப்பு துறை வருவதற்கு முன்பாகவே தங்கள் இல்லங்களில் அல்லது சுற்றுப்புறங்களில் உள்ள பொருட்களை வைத்து அதனை மிதவை பொருட்களாக மாற்றி தன்னையும் தனது குடும்பத்தினரையும் அல்லது மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களை, சிறுவர்களை, கால்நடைகளை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் மூலம் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.
இதில் வருவாய் துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியோடு கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி

வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சேரன்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் வரதராஜ் மற்றும் போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வெள்ள காலங்களில் ஆற்றில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகளை தீயணைப்புத்துறை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்து காண்பித்தனர்.

இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் பிரேமா, மண்டல துணை தாசில்தார் மகாராஜன், வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் பாலமுருகன், துரைபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story