வங்கி, நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடன் தொகையை கட்டாயப்படுத்தி வசூலிக்கக்கூடாது; கலெக்டர் விஷ்ணு உத்தரவு
வங்கி, நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடன் தொகையை கட்டாயப்படுத்தி வசூலிக்கக்கூடாது என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை:
வங்கி, நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடன் தொகையை கட்டாயப்படுத்தி வசூலிக்க கூடாது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டம்
கொரோனா பரவலையொட்டி தமிழகம் முழுவதும் வருகிற 14-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவசர தேவைகளுக்காக பல்வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கிய மக்களிடம் மாதாந்திர தவணைத்தொகை மற்றும் அதற்குரிய வட்டித்தொகையை உடனடியாக திரும்ப செலுத்தக்கோரி சம்பந்தப்பட்ட நிதி நிறுவன பிரதிநிதிகள் வலியுறுத்தி வருவதுடன், பெண்களை பல்வேறு வகையில் மிரட்டி வருவதாகவும் அதிகமான புகார்கள் வந்தன.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பல்வேறு நுண்நிதி கடன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வங்கிகளின் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
கொரோனா ஊரடங்கால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார பாதிப்பை கருத்தில் கொண்டு வங்கிகள், நிதி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் எந்தவித கட்டாய வசூலிலும் ஈடுபடக்கூடாது. கடன் வாங்கியவர்களின் வீடுகளுக்கு சென்று கடனை கேட்டு வற்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
கடனுக்கான தவணை தொகையை வசூல் செய்வதில் கடுமையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுதொடர்பாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்பு கொள்ள...
நிதி நிறுவனங்கள், வங்கிகள் கட்டாய வசூலில் ஈடுபட்டால், ெநல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை 0462-2500302 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியினை cms.nbfcochennai@rbi.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், https://cms.rbi.org.in என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story